Featured Articlesகாலநிலை மாற்ற செய்திகள்

நமக்கு நாமே குழி தோண்டுகிறோம்! எச்சரிக்கின்றார் ஐ. நா. செயலாளர்.

இயற்கையைக் “கழிப்பறை” போல்பாவிப்பதை நிறுத்த கோருகின்றார்.

கிளாஸ்கோ பருவநிலை உச்சி மாநாட்டின் (COP26) இரண்டாம் நாளான இன்றுமிக முக்கிய தலைவர்கள் பலரது உரைகள் இடம்பெற்றுள்ளன. அங்கு முக்கிய பிரமுகராக உரை நிகழ்த்திய ஐ. நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) “நாமே நமக்கான புதைகுழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறோம்” (“We are digging our own graves”) என்று எச்சரித்தார்.

“கனிம எரிபொருள்கள் மீதான எங்கள்அடிமைத்தனம், மனித குலத்தை அழிவின் விளிம்பில் தள்ளிவிட்டது. கார்பன்மூலம் நம்மை நாமே கொன்றது போதும். இயற்கையைக் கழிப்பறை போன்று நடத்தியது போதும். துளையிடுவதும் தோண்டுவதும் எரிப்பதுவும் இனிப் போதும்…”என்று மன்றாட்டமாகக் கூறினார் ஐ. நா.செயலர்.

இதுவரை சுமார் 120 நாடுகளது தலைவர்கள் கிளாஸ்கோ மாநாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கானஅறிவியலாளர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் என அங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்கானோர் முன்பாக மாநாட்டை நடத்தும்நாட்டின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

கற்பனைக் கதைப் பாத்திரமாகிய ரகசிய உளவாளி ஜேம்ஸ் பொண்ட்(secret agent James Bond) பூமியை அழிக்கவல்ல வெடி குண்டு ஒன்றுடன் சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் அக் குண்டைச் செயலிழக்கச் செய்ய எவ்வாறெல்லாமோ முயற்சிக்கிறார்.அந்தக் குண்டு வெடித்தால் பூமி முற்றாக அழிந்துபோகும் ஆபத்து. வெப்பமூட்டப்பட்ட பூமியின் இன்றையநிலையை அந்த ஜேம்ஸ் பொண்ட் கதையுடன் ஒப்பிட்டுப் பேசினார் பொறிஸ்ஜோன்சன்.

“நாங்கள் கிட்டத்தட்ட அதே பூமியின் அழிவு நாள் (doomsday) நிலையில் இருக்கிறோம்”-என்று அவர் உலகத் தலைவர்களைப் பார்த்துக் கூறினார். இன்றைய தொடக்க உரையில் பொறிஸ் ஜோன்சன் கூறிய இந்த”ஜேம்ஸ் பொண்ட்” கதையை ஊடகங்கள் கட்டம் கட்டி வெளியிட்டுள்ளன.

உலக நாடுகள் அனைத்தையும் விட மிக உயர்ந்த அளவில் கார்பனை வெளியேற்றுகின்ற இரண்டாவது நாடாகிய அமெரிக்காவினது அதிபர் ஜோ பைடனும் மாநாட்டில் உரையாற்றினார். சுருக்கமான அவரது உரை அமெரிக்காவின் கார்பன் குறைப்பு உத்திகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கியிருக்கவில்லை. அவை பின்னர் வெளியாகும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வரலாற்றில் அமெரிக்கா வெளியேற்றிய கார்பனின் அளவை உலகில் வேறு எந்தநாடுகளும் இதுவரை எட்டவில்லை என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2019 தரவுகளின் படி அது 5,107 மெகா தொன் (megatonnes) கார்பனை (CO2) வெளியேற்றியிருக்கிறது. 1750 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா வெளியேற்றிய கார்பனின் உத்தேச மதிப்பீடு 410.2பில்லியன் தொன்கள் (bn tonnes) என்று பிபிசி செய்தி ஒன்று கூறுகிறது.அதிகமாக மாசு வெளியேற்றுகின்ற நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் சீனாவும் மூன்றாவது ஸ்தானத்தில் ஜேர்மனியும் உள்ளன. மற்றொரு முக்கிய நாடு ரஷ்யா.இவற்றுக்குப் பின்னால் இந்தியா உள்ளது. சீனா, ரஷ்யா இருநாடுகளது தலைவர்களும் கிளாஸ்கோ மாநாட்டில் நேரடியாகப் பங்குபற்றவில்லை.

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.