நிலக்கரிப் பாவிப்பை நிறுத்துவதாக உறுதிமொழி கொடுத்தன 190 நாடுகளும், பல அமைப்புக்களும்.
கிளாஸ்கோ மாநாட்டில் மேலுமொரு நற்செய்தியாக எரிசக்திக்காக நிலக்கரியைப் பாவிப்பதை நிறுத்துவதாக 190 நாடுகளும், அமைப்புக்களும் உறுதியளித்திருக்கின்றன. ஆனால், தமது எரிசக்திக்காகவும் பொருளாதாரத்துக்காகவும் நிலக்கரி எரிப்பில் தங்கியிருக்கும் முக்கிய நாடுகள் சில அவ்வொப்பந்தத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டிருக்கின்றன.
உலகின் பல பகுதிகளை இயற்கை அழிவுகளால் பாதித்துவரும் காலநிலை மாற்றத்தின் முக்கிய காரணம் மனிதர்களின் இயக்கங்களினால் வெளியிடப்படும் காற்றை மாசுபடுத்தும் நச்சு வாயுக்களே என்பதை விஞ்ஞானிகள் பல தடவைகள் தெளிவாக வலியுறுத்தியிருக்கிறார்கள். அந்த நச்சு வாயுக்களில் பெரும்பகுதி நிலக்கரியை எரிப்பதால் உண்டாகின்றன.
எனவே தமது நிலக்கரிப் பாவிப்பை நிறுத்திவிட்டு காலநிலைப் பாதிப்புக்கு இடமளிக்காத பசுமையான வளங்களின் மூலம் வரும் எரிசக்தியைப் பாவிப்பதற்கு மாறவேண்டுமென்று உலக நாடுகளை வலியுறுத்தி ஆதரவு சேர்ப்பதும் கிளாஸ்கோ காலநிலை மாநாட்டில் Powering Past Coal Alliance என்ற நாடுகளின் குழுவினால் நடாத்தப்பட்டது. அதன் விளைவாகவே குறிப்பிட்ட நாடுகள் அதற்காக உறுதிமொழியெடுத்துள்ளன.
ஆனால், சீனா, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்ரேலியா போன்ற நாடுகள் நிலக்கரிப் பாவிப்பை நிறுத்துவதற்கு முடிவெடுக்கவில்லை. தற்போதைய நிலையில் எரிசக்திக்காக நிலக்கரிப் பாவிப்பு என்பது ஒப்பீட்டளவில் மலிவாக இருப்பதே அதன் முக்கிய காரணமாகும். அவர்கள் தமது பொருளாதாரத்தின் அடிப்படையை மாற்றிப் பசுமையான எரிசக்திகளாலான தொழில்நுட்பங்களுக்குத் தம்மை மாற்றிக்கொள்வதற்குச் செலவும் மிக அதிகமாகும் என்று கணிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்