இளையோரிடம் பிரபலமாகும் நாகரீக பானம் “பபிள் தேநீர்”!

கிழக்கு ஆசிய நாடுகளில் மிக நீண்ட காலமாக நுகரப்படும் “பபிள் ரீ” மென்பானம் தற்போது பிரான்ஸில் இள வயதினரை ஈர்த்து வருகிறது.

“பபிள் தேநீர்”(“bubble tea”) நாகரீகமானது. ஆனால் சாதாரண மென்பானங்களைவிட (சோடா) ஆரோக்கியத்தில் குறைவானது-என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமீப காலமாகப் பாரிஸ் உட்பட பல நகரங்களில் ‘ரீன் ஏஜ்’ பிராயத்தினர் மத்தியில் பிரபலமாகி வருகிறது “பபிள் தேநீர்”. கூட்டமாக வரும் இளையோரது கைகளில் பல வர்ணங்களில் தோன்றும் ‘பபிள் தேநீரை அவர்கள் ஓர் உற்சாக பானம் போன்று உணர்கிறார்கள்”செல்ஃபி” என்கின்ற தம் படங்களில் கவர்ச்சியாகத் தெரிகின்ற அதன் வர்ணங்களின் அழகால் “இன்ஸ்ரகிராம்பானம்” என்றும் “செல்லமாக” அழைக்கப்படுகிறது.

திடீரென நாகரீகத்தில் சிக்கியுள்ள பபிள் தேநீரின் பூர்வீகப் பின்னணி என்ன?

பல நாடுகளில் வெவ்வேறு பெயர்களில்அழைக்கப்படுகின்ற சுவையூட்டிய பபிள்தேநீர் தைவான் நாட்டைப் பூர்வீகமாகக்கொண்டது. மரவள்ளிக் கிழங்குகளில் தயாரிக்கப்படும் சவ்வரிசி முத்துக்கள் (tapioca pearls)சேர்த்து – பாயாசம் போன்று – அல்லது கசகசா கலந்த சர்பத் போன்ற- கலவையாகப் பல வர்ணங்களில் கிடைக்கின்ற அந்த ஆசிய நாட்டுக் குடிபானம் இப்போது ஐரோப்பாவிலும் பிரபலமாகி விட்டது. அடிப்படை உள்ளடக்கங்களைமாற்றிப் பல புதிய சுவைகளில் அவை இங்கு தயாரிக்கப்படுகின்றன.

பிரான்ஸில் அதிகம் இளையவர்களால்நுகரப்படுகின்ற அதன் தன்மைகள், தயாரிப்பு முறைகளை ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. தேயிலை, கோப்பி என்பவற்றை விட அதில் அதிக கலோரி இனிப்பு அடங்குவதால் அது ஆரோக்கியமானபானம் அல்ல என்று பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது. கோலா போன்றஅதிக இனிப்புப் பானங்களை விட பபிள்தேநீரில் பால் போன்ற ஊட்டச் சத்துக்கள்அடங்குவதால் இளையோருக்கு அது ஆரோக்கியமானது என்றும் சில ஊட்டச்சத்து நிபுணர்கள் தங்கள் கருத்துக்களைமுன்வைக்கின்றனர்.

ஜவ்வு போன்ற தன்மை கொண்ட tapioca pearls மற்றும் popping boba என்பன புற்றுநோயை உருவாக்குகின்றன என்று கிளப்பப்பட்ட சர்ச்சைகளை அடுத்து சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனி நாட்டில்அது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தன. tapioca pearls புற்றுநோய்க்கு காரணம் அல்ல என்பதை அந்த ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருந்தன.

பாரிஸ் உட்பட பல நகரங்களில் பபிள் தேநீருக்கென தனியான கடைகள் பல இயங்கத் தொடங்கியுள்ளன.”பபிள் ரீ”என்ற பெயர் கிழக்கு ஆசிய அரசியல்போராட்டங்களிலும் பிரபலமானது.ஹொங்கொங், தைவான், தாய்லாந்து மியன்மார் போன்ற நாடுகளில் ஐனநாயக உரிமை கேட்டுப் போராட்டங்களை நடத்துவோர் #MilkTeaAlliance என்ற சமூகஊடக இடுகுறிச் சொல்லின் (hashtag) கீழ் ஒன்றிணைந்துள்ளனர்.

குமாரதாஸன். பாரிஸ்.