தெற்காசிய நாட்டவர்களின் மரபணுவிலிருக்கும் தன்மை அவர்களைக் கொவிட் 19 க்கு பலவீனர்களாக்குகிறது.
கொவிட் 19 ஆல் தாக்கப்படும் தென்னாசியர்களுடைய நுரையூரல்களை இரண்டு மடங்கு அதிகமாகத் தாக்கக்கூடியதாக ஒரு மரபணுப் பகுதி அவர்களில் இருப்பதை பிரிட்டன் விஞ்ஞானிகள் அடையாளங்கண்டிருக்கிறார்கள். அந்தக் கண்டுபிடிப்பின் மூலம் ‘குறிப்பாக ஏன் சிலர், சில இனத்தவரிடையே கொரோனாத்தொற்று உயிர்களைக் குடிப்பது அதீதமாக இருக்கிறது,’ என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
தெற்கு ஆசியர்களில் 60 விகிதமானவர்கள் குறிப்பிட்ட அந்த மரபணுப்பகுதியைத் தங்களுடைய மூதாதையரிடமிருந்து பெற்றிருக்கிறார்கள். அது அவர்களில் 60 வயதுக்குக் குறைவானவர்களையும் கொவிட் 19 தீவிரமாகத் தாக்குவதற்கு வழியுண்டாக்குகிறது. அதனால்தான், ஐக்கிய ராச்சியத்தில் வாழும் ஆசியர்களிடையே அவ்வியாதியால் இறப்பு அதிகமாக உண்டாகக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள்.
அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் குறிப்பிட்ட மரபணுப்பகுதிக்கு LZTFL1 என்று அடையாளப் பெயரிடப்பட்டிருக்கிறது. அது வியாதியை எதிர்க்க நபரின் எதிர்ப்புச்சக்தியைப் பாதிக்கவில்லை. இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் கொரோனாக் கிருமிகள் சுவாச அவயவங்களின் இயக்கத்தை எப்படிப் பாதிக்கின்றன என்று புரியவைத்திருக்கிறது.
மேற்கண்ட கண்டுபிடிப்பானது அந்தந்த நபர்கள், இனத்தவரைக் குறிவைத்து கொவிட் 19 மருந்துகளைக் கண்டுபிடிக்க உதவ வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சாள்ஸ் ஜெ. போமன்