தனது நேரத்திலும், செலவிலும் 2,500 கி.மீ தூரத்தைக் கடக்கச் செலவிட்ட சூழல் பேணுபவர் தன்னையே நொந்துகொண்ட கதை.
சுற்றுப்புற சுழல் மாசுபாட்டைக் குறைத்துக் காலநிலை மாற்றத்தைத் தடுப்பதென்பது சொல்வது போல இலகுவானது அல்ல என்று COP26 மாநாட்டுக்குப் பயணித்த லித்தவேனியப் பிரதிநிதியொருவர் செயலில் காட்டியிருக்கிறார். அத்தூரத்தைக் கடக்க அவர் தனது 300 எவ்ரோ செலவிட்டார். அவருடைய சக பிரதிநிதிகளோ வெறும் 30 எவ்ரோக்களில் அப்பிரயாணத்தைச் செய்தனர்.
காலநிலை மாற்றத்தைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கும் லித்தவேனிய அமைச்சின் வெளியுறவுத் தொடர்பாளர் மாரியுஸ் காலியுஸ் தனது அரசின் பிரதிநிதிகளாக காலநிலை மாநாட்டுக்குப்போகும் 26 பேரைப் போலன்றி ஒரு முன்மாதிரிகையாக இருக்கவேண்டும் என்று நினைத்தார். அவர்களெல்லாம் விமானத்தில் கிளாஸ்கோவுக்குப் போனபோது அவரோ சூழலை அதிகம் பாதிக்காத பிரயாணம் செய்யவேண்டுமென்று பொதுப் போக்குவரத்துகளைத் தெரிந்தெடுத்தார்.
தனது நாட்டின் தலை நகரான வில்நியூஸிலிருந்து போலந்தின் பியாலிஸ்டொக்குக்கு பேருந்து, அங்கிருந்து இன்னொரு நகரான போஸ்னானுக்கு மேலுமொரு பேருந்து, அங்கிருந்து வேறொருவருடன் காரில் தொற்றிக்கொண்டு பேர்லின், இன்னொரு பேருந்தில் ஆம்ஸ்ரடாம் சென்று அங்கிருந்து பிரயாணக் கப்பலில் 17 மணிப் பிரயாணத்தில் ஐக்கிய ராச்சியத்தின் நியூகாஸிலை அடைந்து அங்கிருந்து ரயிலில் கிளாஸ்கோவை அடைந்தார்.
அவர் மீண்டும் தனது நாட்டுக்கு வெள்ளியன்று விமானத்தில் பறந்தார்.
பயணித்த பொதுப் போக்குவரத்துகளிலெல்லாம் பாதிக்கு மேற்பட்ட இடங்கள் காலையாகவே இருந்தது என்கிறார் அவர். கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக இருக்கலாம். ஆயினும், தற்போதைய நிலையில் ஐரோப்பாவில் காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்தும் விதமாக விரும்பினாலும், பிரயாணம் செய்வது அர்த்தமில்லை என்கிறார் மாரியுஸ்.
சாள்ஸ் ஜெ. போமன்