வேர்ஜின் கலக்டிக் விண்வெளிப் பயணத்துக்காக மேலும் 300 பயணச்சீட்டுகள் மீதமிருக்கின்றன: விலை 450,000 டொலர்.
ஜூலை மாதத்தில் தனது நிறுவன விண்கலத்தில் வெற்றிகரமாக விண்வெளிக்குச் சென்று திரும்பிய ரிச்சார்ட் பிரான்சனின் வேர்ஜின் கலக்டிக் தனது பயணச்சீட்டுகளின் விலையை ஏறக்குறைய இரட்டிப்பாக உயர்த்தியது. 250,000 டொலரென்று முதற்கட்டத்தில் அறிவிக்கப்பட்ட விண்வெளிப் பயணச்ச்சீட்டுக்களின் விலை 450,000 டொலராக்கப்பட்டிருக்கிறது.
அந்த விலையில் 1,000 பயணச்சீட்டுக்களை விற்கத் திட்டமிட்டிருக்கும் வேர்ஜின் கலக்டிக் நிறுவனம் ஏற்கனவே 700 ஐ விற்றுவிட்டிருப்பதாகவும் அவை திட்டமிட்ட காலத்துக்கு முன்னரே விலையாகிவிட்டதாகவும் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மைக்கல் கோல்கிளைசர் குறிப்பிட்டிருக்கிறார்.
விண்வெளிக்குத் தனது இரண்டு பரிட்சாத்திர விமானிகளுடன் பறந்த பிரான்சனின் விண்கலம் 53 மைல் உயரத்துக்குச் சென்றதாகக் குறிப்பிடப்பட்டது. 2022 இல் அவர்களது விண்வெளிப்பயன வர்த்தகம் ஆரம்பமாகவிருக்கிறது.
பயணம் செய்ய விரும்புகிறவர்கள் முதல் கட்டமாக 150,000 டொலர் முன்பணம் கட்டவேண்டும். பின்பு பயணிக்காமல் மறுப்பவர்களுக்கு அதில் 25,000 டொலர் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது.
சாள்ஸ் ஜெ. போமன்