ஊசி ஏற்றாதோருக்கு உள்ளிருப்பு! ஒஸ்ரியா நிலைமை பிரான்ஸிலும் வருமா?
பொதுமுடக்கத்தைத் தவிர்ப்பதற்கேவிரும்புகிறோம்-
பிரான்ஸ் அமைச்சர் ஒஸ்ரியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தேசிய அளவிலான பொதுமுடக்க சுகாதாரக் கட்டுப்பாட்டு விதிகள் மறுபடியும் அமுல் செய்யப்பட்டிருப்பதை அடுத்துப் பிரான்ஸிலும் அதுபோன்ற நிலைமை வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
அரசாங்கப் பிரதிநிதிகளிடம் இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
ஐரோப்பாவில் குறைந்த எண்ணிக்கையானோருக்குத் தடுப்பூசி வழங்கியுள்ள நாடுகளில் ஒன்றான ஒஸ்ரியாவில் தடுப்பூசி ஏற்றாதவர்களது நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் -அவர்களுக்கு மட்டுமேயான-தேசியரீதியிலான பொதுமுடக்கத்தை அந்நாட்டுஅரசு அறிவித்திருக்கிறது.
நேற்று மாலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரான்ஸின் நிதி அமைச்சர் புருனோ லு மேயரிடம்(Bruno Le Maire) ஒஸ்ரியா நிலைவரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர் -“புதிய பொது முடக்கம் ஒன்றைத் தவிர்ப்பதற்கு வேண்டிய அனைத்தும் செய்யப்படும்” – என்று தெரிவித்தார்.
“அது போன்ற ஒரு நிலைமையைத் தவிர்ப்பதற்கே விரும்புகிறோம். அதற்காக எல்லா விதமான நடவடிக்கைகளையும் எடுப்போம்.புதிய பொது முடக்கத்தைத் தவிர்ப்பதற்கு இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். தடுப்பூசி போட விரும்பாத அனைவரும் அதன் நன்மை-தீமையை எடைபோட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்… “-
இவ்வாறு அமைச்சர் புருனோ மேயர் பதிலளித்தார். மீண்டும் பொது முடக்கம் வருமா என்றுஅரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டாலிடமும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர்,” அவ்வாறான ஒரு கேள்வியைக் கேட்க வேண்டிய நிலைவரம் நாட்டில் இப்போது இல்லை “என்று பதிலளித்துள்ளார்.
பிரான்ஸில் கடந்த ஒரு வார காலத்தில் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை சராசரியாகப் 10,000 என்ற அளவில் உள்ளது. நெதர்லாந்தில் மூன்று வாரங்களுக்கு தேசிய அளவிலான பல சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருப்பது தெரிந்ததே. அதேபோன்று ஒஸ்ரியா நாட்டில் தொற்று மிக வேகமாகி வருவதை அடுத்து அங்கு தடுப்பூசி ஏற்றாதவர்கள் மிக அவசர தேவைகள் தவிர வீட்டில் இருந்து வெளியேறுவதைத் தடுக்கும் விதிகள் அடுத்த பத்து நாட்களுக்கு அமுல் செய்யப்படவுள்ளன.
தடுப்பூசி ஏற்றாதவர்களுக்கு மட்டுமானபுதிய பத்து நாள் உள்ளிருப்புக் கட்டுப்பாடுகளுக்கு நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது
குமாரதாஸன். பாரிஸ்.