வியட்நாம் தடுப்பூசி போட்டுக்கொண்ட உல்லாசப் பயணிகளுக்குக் கதவைத் திறந்தது.
கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்காக தனது எல்லைகளைக் கடுமையாக மூடிய நாடுகளிலொன்று வியட்நாம். அதன் விளைவாக நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரிதும் துணையாக இருக்கும் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது. சுற்றுலாத் துறையால் 10 % பொருளாதாரத்துக்குத் தங்கியிருக்கும் வியட்நாம் தனது சுற்றுலாத் தீவொன்றை நீண்ட காலத்துக்குப் பின்னர் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்திருக்கிறது.
சுமார் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 200 வெளிநாட்டுப் பயணிகள் Phu Quoc தீவுக்கு வந்திறங்கினார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்த வேண்டியதில்லை. ஆனால், அங்கிருக்கும் சுற்றுலா தலத்துக்குள்ளேயே தங்கள் நேரத்தைச் செலவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அங்கிருகும் சமயத்தில் இரண்டு தடவைகள் அவர்கள் தொற்றுக்காகப் பரிசோதனை செய்துகொள்வார்கள்.
வரையறுக்கப்பட்ட இடங்களைச் சுற்றுலாப்பயணிகளுக்காகத் திறப்பதை பக்கத்து நாடான தாய்லாந்து சில மாதங்களாகவே வெற்றிகரமாகச் செய்து வருகிறது. அந்த வழியிலேயே வியட்நாமும் நாட்டின் வேறு சில சுற்றுலாத் தலங்களை விரைவில் திறக்கவிருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொண்ட உள்ளூர், வெளியூர் பயணிகள் அத்தலங்களுக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லை.
ஜனவரி மாதம் முதல் முழுவதுமாக நாட்டை வெளிநாட்டுப் பயணிகளுக்காகத் திறக்கும் திட்டத்திலிருக்கும் வியட்நாம் தனது 98 மில்லியன் மக்களில் பாதிப்பேருக்குத் தடுப்பூசிகளைப் போட்டிருக்கிறது. ஜூன் மாதம் முதல் நாட்டைச் சாதாரண நிலைக்குக் கொண்டுவருவது தமது நோக்கம் என்கிறர்கள் வியட்நாமின் சுற்றுலாத் துறை அமைச்சினர்.
சாள்ஸ் ஜெ. போமன்