பல்கேரியாவில் நடந்த சுற்றுலாப் பேருந்து விபத்தில் 12 சிறார் உட்பட 45 பேர் எரிந்து இறந்தார்கள்.
துருக்கியிலிருந்து, வட மசடோனியாவை நோக்கிச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து ஏதோ காரணத்தால் எரிய ஆரம்பித்தது. அது வீதியின் நடுப்பகுதியில் மோதி அதனுள்ளிருந்த 45 பேர்களாவது இறந்துவிட்டதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இறந்தவர்களின் உடல்கள் பல அடையாளம் தெரியாதபடி எரிந்துவிட்டிருப்பதால் எண்ணிக்கை 46 ஆக இருக்கலாமா என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து விபத்துக்குள்ளானபோது அதற்குள் பயணம் செய்துகொண்டிருந்தவர்கள் 52 பேராகும். இறந்தவர்களில் 12 பேர் பிள்ளைகள் என்றும் தெரியவருகிறது. பேருந்துச் சாரதியும் இறந்துவிட்டார். பேருந்து வட மசடோனியாவில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இறந்தவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
பல்கேரியாவில் விபத்து நடந்ததால் அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் உடனடியாக அங்கே மீட்புப் படைகளின் சேவைகளைப் பார்க்க விஜயம் செய்திருக்கிறார். இறந்தவர்களில் துருக்கி, அல்பானியா ஆகிய நாட்டவரும் இருக்கலாம் என்று பல்கேரியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிகிச்சை பெற்றுவருபவர்கள் எரியும் பேருந்திலிருந்து குதித்துத் தப்பியவர்கள் என்று தெரியவருகிறது. அவர்களுடைய எரிகாயங்கள் மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்