கப்பல்களின் இடவிபரங்களைக் தேடிக் காட்டும் கருவியைச் சீனா நிறுத்திவிட்டது.
சர்வதேசக் கப்பல்கள் சீனாவின் எல்லைகளை நெருங்கும்போது அவை எங்கிருக்கின்றன, எப்போது கரையை வந்தடையும் போன்ற விபரங்களைக் காட்ட உதவுவதற்காகச் சீன நிலப்பகுதியிலிருக்கும் தொலைத்தொடர்பு வாங்கிகளின் இயக்கத்தைச் சீனா கடந்த மாதத்தில் நிறுத்திவிட்டது. தமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதே அதற்குக் காரணம் என்று சீன அரசு குறிப்பிட்டிருக்கிறது.
ஒரு கப்பல் சர்வதேசக் கடலில் பயணித்துக்கொண்டிருக்கும்போது அதிலிருக்கும் கருவியொன்று [transponder]அது யாருடையது, எங்கே போய்க்கொண்டிருக்கிறது போன்ற விபரங்களைக் காட்டும். கப்பல் கரையொன்றை நெருங்கும்போது கரையிலிருக்கும் தொலைத்தொடர்பு நிலையங்கள் அந்தக் கப்பலின் விபரங்களை துறைமுகங்களுக்கு [AIS vessel tracking] தானாக அடையாளப்படுத்தும் கருவி மூலம் காட்டும்.
சர்வதேசத் துறைமுகங்கள் எந்தெந்தக் கப்பல் எங்கிருந்து, எப்போது தம்மிடம் வந்தடையும் என்பதைக் கணித்து அவைகளுக்கான நிறுத்துமிடம், சரக்குகளை ஏற்றுதல், இறக்குதல் போன்றவைகளைப் பற்றித் திட்டமிடக் கப்பலுடன் அவர்களுடன் தொடர்புகொள்ள, குறிப்பிட்ட தானாக அடையாளப்படுத்தும் கருவி உதவுகிறது. இது ஒரு சர்வதேச அடையாளப்படுத்தும் கருவியாகும். சகல நாடுகளும், நிறுவனங்களும் அதைப் பாவித்துத் தமது சரக்குகள் எப்பெப்போ, எங்கெங்கு போய்\வருகின்றன என்பதைத் தெரிந்துகொள்ள உதவுகிறது.
தனது நிலப்பரப்பிலிருக்கும் அந்தத் தொலைத்தொடர்பு உள்வாங்கிகளில் 90 விகிதமானவற்றைச் சீன அரசு செயற்படாமல் நிறுத்தியிருப்பதால் சீனாவுக்குச் செல்லும் சரக்குக்கப்பல்கள் அங்குள்ள துறைமுகங்களுக்குத் தமது விபரங்களைத் தெளிவாகக் கொடுக்க முடியாது. அதனால் துறைமுகங்களின் திட்டமிடுதல் மட்டுமன்றி அவையுடன் தொடர்புள்ள பாரவண்டிகள், சரக்கு ரயில்களும் எவ்வெப்போ கப்பல்கள் பாரமேற்ற வரும், போகும் போன்ற விபரங்களைத் தெரிந்துகொள்ள முடியாது.
கொவிட் 19 பரவலால் ஏற்பட்டிருந்த துறைமுகங்களின் முடக்கம், சுயஸ் கால்வாய் போக்குவரத்துத் தடையால் ஏற்பட்டிருந்த சரக்குப் போக்குவரத்துகளின் தாமதம், அதையொட்டி ஏற்பட்டிருந்த கப்பல் கொள்கலங்கள் தட்டுப்பாடு ஆகியவை ஏற்கனவே சர்வதேசச் சரக்குப் போக்குவரத்தைப் பெருமளவில் பாதித்திருக்கிறது. அதன் விளைவால் பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், பொருட்களுக்குத் தட்டுப்பாடும், விலையுயர்வும் ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே உண்டாகி, சீர்செய்யக் காலமெடுக்கும் என்ற நிலையிலிருக்கும் சர்வதேச நீர்வழிச் சரக்குப் போக்குவரத்து சீனாவின் நடவடிக்கையால் மேலும் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. உலகின் மிகப்பெரிய சரக்குத் துறைமுகங்களில் 6 சீனாவின் கரைகளில் உள்ளன. உலகின் பல நாடுகளின் பல நிறுவனங்களின் தயாரிப்புச் சங்கிலியும் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை நம்பியிருப்பதால் சீனாவின் துறைமுகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தடங்கல் உலக நாடுகளிலெல்லாம் எதிரலைகளை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்