கடந்த வாரம் போலவே மீண்டும் சுவீடனில் பெண் பிரதமராக மக்டலேனா ஆண்டர்சன் தெரிவுசெய்யப்பட்டார்.
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத மக்டலேனா ஆண்டர்சன் இன்று மீண்டும் சுவீடன் பாராளுமன்றத்தில் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார். கடந்த வாரம் தனது கட்சியின் ஆதரவில் மட்டுமே தான் மீண்டும் பிரதமராவேன் என்று சூழுரைத்தபடி மீண்டும் அப்பதவிக்கு வந்திருக்கிறார்.
சுவீடனில் நிலவும் பாராளுமன்றக் கட்சிகளுக்கிடையேயான நிலையில் பெரும்பான்மை வாக்குகள் கொண்ட கூட்டணியே சாத்தியமில்லை என்பதையே கடந்த வாரத்தில் இதே மக்டலேனா ஆண்டர்சன் காலையில் தெரிவுசெய்யப்பட்டு மாலையில் ராஜினாமா செய்யவேண்டியிருந்தது புரியவைத்தது. ஆண்டர்சனை மீண்டும் பிரதமராக வாக்களிக்கச் சிறு கட்சிகள் இரண்டு வாக்களித்தாலும் அவரது அரசாங்கத்தில் செயற்படத் தயாராக இல்லை என்பதே புதிய செய்தியாகும்.
101 பேர் ஆண்டர்சனைப் பிரதமராக ஆதரித்தார்கள். 173 பேர் எதிர்த்து வாக்களித்தார்கள். 75 பேர் எவருக்கும் வாக்களிக்கவில்லை. ஆண்டர்சன் பிரதமராவதை எதிர்த்துப் பாராளுமன்றத்தின் அரைப்பங்கு உறுப்பினர்கள், 175 பேர், வாக்களிக்காததால் அவர் பிரதமராக இன்று தெரிவுசெய்யப்பட்டார்.
ஆண்டர்சன் தனது கட்சியின் சிறுபான்மை நிலைமையிலேயே அரசாங்கத்தை அமைப்பார். அவருக்கான வரவு செலவுத்திட்டம் ஏற்கனவே கடந்த வாரத்தில் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. அதற்கே பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் ஆண்டர்சனின் அரசு, தனது எதிர்க்கட்சிகளின் வரவுசெலவுத் திட்டத்தின்படியே வரவிருக்கும் 10 மாதங்களும் ஆளவேண்டியிருக்கும்.
அடுத்த வருடம் இலையுதிர்காலத்தில் சுவீடனின் பொதுத்தேர்தல் நடைபெறும்.
சாள்ஸ் ஜெ. போமன்