இதயத்தில் உன் இருப்புக்கான காத்திருப்பு

கண்ணே! மணியே! என் இதயத்தை வருடப்போகும் தேவதையே!

எனக்காக பிறந்தவளே, எங்கிருங்கின்றாய் என்னவளே

என் மாமன் மகளோ நீ…
இல்லை இல்லை அத்தை மகளா நீ…
பள்ளியில் என் கூடப்படிக்கும் கோகிலாவா நீ..
அல்லது பக்கத்துவீட்டு பாக்கியமக்காவின் கடைக்குட்டியாடி நீ

பல அழகு முகங்கள் வந்து போகிறது. நீ என் நண்பனின் பாசமலர் இல்லை தானே.

பயமும் படபடப்பும் பற்றிக் கொள்கிறது.

எனக்காக பிறந்து எங்கோ என் காதலை எதிர்பார்த்திருக்கும் காவியாவா நீ…

என்னைத்தாண்டி யார் போனாலும் அது நீயாக இருக்கக்கூடாதா என்று மனது அடித்துக்கொள்கிறது…

பாடப்புத்தகத்தை திறந்தே வைத்திருக்கிறேன்…ஐயகோ ..என்னால் அடுத்த பக்கத்தை திருப்பமுடியவில்லை

கணக்கு போட முடியவில்லை. கணக்கு பண்ணத்தான் முடிகிறது.

ஆத்தா தடியோடு நின்று தாண்டவம் ஆடுகிறார் “படியடா படித்தால் தான் வாழ முடியுமாம்”

முடியவில்லை, என்னால் முடியவில்லை.
ஒரு நிமிடத்தில் பல முறை கடிகாரத்தை பார்க்கிறேன் நேரமோ போகவில்லை… என் செய்வேன் நான் காதலியே..

காத்திருப்பு வெறுப்பு தருகிறது. காலமெல்லாம் வீணாகிறது.

வயதும் போகிறது.

மனம் பதைபதைக்கிறது உன்னை காணாமலே என் கட்டை வெந்துவிடப்போகிறதோ.

கனவு காண்பது மிகவும் பிடித்திருக்கிறது ஏனென்றால் அங்கு தான் நான் என்னவளோடு டூயட் பாட முடிகிறது.

தனிமை ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது அங்கு தான் இடையூறின்றி இணைந்திருக்க முடிகிறது.

காதலியையே கரம்பிடித்து என்னவளை எனக்கானவளாக்கி இந்த உலகமே வியக்கும் காதலால் காவியமாகிட வேண்டுமம்மா.

உன் கைகளை பற்ற என் விரல்களுக்கு வரம் கொடுத்திடு தாயே.

உன் இதயத்தை ஆராதிக்க மனம் வைக்க மாட்டாயா.

உன் தலை கோத தலை சாய்க்க மாட்டாயா..

உன் கண்களில் நானே ஒளியாவேன் கடைக்கண் பாராயா காதலியே.

உன் தோளில் சாய்ந்து உனக்கான தோழனாகிட தோழமை தாராயோ.

என்றும் உன்னை என் இதயத்தில் பூஜிக்க உன் இதயத்தை கடனாக கடன் கொடு என் கண்ணின் மணியே.
மனையாளே.

என்றும் உன் நினைவுகளுடன் உன் இதயத்திற்காக காத்திருக்கும்…..
உன்னவன்

எழுதுவது ;கரவெட்டி ராஜி