முயற்சிக்கு ஏது தடை…

விழி
மூடிக்கிடக்கிறது
எங்கும் இருள்
கவ்விக் கொண்டிருப்பதுபோல் மனம் சொல்கிறது…

எல்லாமும்
ஒரு முற்றுக்குள்
வந்ததுபோல்
நினைவுகள்
சலனமற்று கிடக்கிறது…

தேடலோ
தவிப்போ இல்லாமல்
ஆழ்நிலையில் யாவும்…

எதுவும்
நம்மால் இல்லை…
எதுவும்
நம்மிடமில்லை…
எதுவும் நாமில்லை…

நடப்பவை யாவும்
எதையோ அழுத்தமாய்
சொல்லிக் கொண்டுள்ளது…

உயிரின் துடிப்புகள்
மூச்சிறுப்பதை மட்டும்
உறுதி செய்கிறது…
ஆனாலும்
இலைகள் எல்லாம்
உதிர்ந்துபோன மரமாய்
உடல் அசைவற்றுதான் கிடக்கிறது…

விழிகளைத் திறந்தால்
வெளிச்சம் தெரியுமா…
வெளிச்சம் வந்தால்
விழிகள் திறக்குமா…

கேள்விகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது…

சோர்வு
சுருட்டிப் போட்டுள்ளதால்
பலமிழந்து கிடக்கிறது உடல்…

என்ன இருக்கிறது..
எதற்காக…
இதுவே ஆனந்தமாய்…

எது நடப்பினும்
நடக்கட்டுமே…
போதும்…
கண்டது போதும்
களித்தது போதும்
உண்டது போதும்
உறங்கியது போதும்…

நேற்றிருந்த எதுவும்
இன்றில்லை…
அழகில் தொடங்கி
ஆரோக்கியம் வரையில்…
வேகத்தில் தொடங்கி
வீரம் வரையில்…

கிழிக்கப்பட்ட
நாட்களில்
நானும்
கிழிக்கப் பட்டிருக்கிறேன்
என்பதை
அனுபவம் சொல்கிறது…

நிறைவு…
எல்லா அழுத்தங்களையும்
இறக்கி வைக்கிறது…

மனதுடன்
விழிகளும் திறக்கிறது…

எங்கோ..
தொலைவில்
சின்னதாய்
ஒரு வெளிச்சம்…

அங்கே
என்ன இருக்கிறது…
மீண்டும் ஒரு தேடல் துவங்குகிறது…

உடல் எழுகிறது..
கால்கள் நடக்கிறது…
நடக்க நடக்க
சின்னதான அது
பெரிதாகிக்கொண்டே வருகிறது…

ஒளி வெள்ளம்
பாதையைக் காட்டுகிறது…
பயணம் தொடர்கிறது…

மூச்சிருக்கும் வரையில்
முயற்சிக்கு ஏது தடை…

எழுதுவது ; பாரதிசுகுமாரன்