“பெண்களின் உரிமைகளை மதிக்கக்கூடிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவேண்டும்,” தலிபான்களின் தலைமை.
வெள்ளியன்று ஆப்கானிஸ்தான் தலிபான்களின் தலைமையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின்படி அவர்கள் உடனடியாக, “ஆப்கானியப் பெண்களின் உரிமைகளை மதிக்கும்,” சட்டங்களை அமுலுக்குக் கொண்டுவரவேண்டும். அந்த ஆணையை அவர்களுக்குப் பிறப்பித்திருப்பவர் அந்த அமைப்புகளின் ஆன்மீகத் தலைவரான ஹைபதுல்லா அகுண்ட்சாடாவாகும்.
“திருமணம் செய்துகொண்ட பெண்கள், விதவைகளின் உரிமைகளை நிலைநாட்டுவதற்குரிய கட்டுப்பாடுகள், சட்டங்களைக் கொண்டுவருவதில் உடனடியாகச் சகல அதிகாரிகளும் கவனமெடுக்கவேண்டும். எந்த ஒரு பெண்ணையும் திருமணத்துக்காகக் கட்டாயப்படுத்தலாகாது. விதவைகள் இறந்துபோன கணவரின் ஒரு பகுதி சொத்துக்களைப் பெறவேண்டும்,” என்று ஹைபதுல்லா அகுண்ட்சாடா தனது அமைச்சர்களிடம் ஆணை பிறப்பித்திருப்பதாகத் தெரிகிறது.
ஆனால், உலகின் பல நாடுகளும், மனிதாபிமான அமைப்புக்களும் கேட்டுவரும் பெண்களின் பாடசாலைகளைத் திறத்தல், பொதுப்பணித்துறையில் வேலைசெய்துவந்த பெண்களை மீண்டும் வேலைக்குச் செல்ல அனுமதித்தல், போன்றவை பற்றி வெளியாகியிருக்கும் உத்தரவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தலிபான்கள் பெண்களை முகம் மறைக்கு புர்க்கா அணிந்து ஆண் துணையுடன் மட்டுமே வீட்டைவிட்டு வெளியேறலாம் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள்.
ஹைபதுல்லா அகுண்ட்சாடா உயிரோடிருக்கிறாரா என்பதைப் பற்றியே பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் அவர் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசியதாக வெளியிடப்பட்ட செய்தி யாருடைய குரல் என்றும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்