வளைகுடா எண்ணெய் வள நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறார் மக்ரோன்.
டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்காலம் போன்றளவுக்கு அமெரிக்காவின் ஆசைப்பிள்ளையாக இல்லாத நிலைமையிலிருக்கும் வளைகுடா எண்ணெய் வள நாடுகளுக்கு இரண்டு நாட்சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மக்ரோன்.
டுபாயில் நடந்துவரும் எக்ஸ்போ 2020 க்கு வெள்ளிக்கிழமையன்று பிரெஞ்சுத் தலைவர் விஜயம் செய்கிறார். அதையடுத்து நடக்கவிருக்கும் உயர்மட்ட அரசியல் பேச்சுவார்த்தைகளில் அவர் அபுதாபியின் பட்டத்து அரசகுமாரன் முஹம்மது பின் ஸாயத் அல்-நஹ்யானைச் சந்தித்தார். அச்சந்திப்பின்போது பிரெஞ்சு – எமிரேட்ஸ் பொருளாதாரக் கூட்டுறவுத் திட்டங்கள் பற்றி முடிவெடுக்கப்பட்டிருக்கின்றன. பிரான்ஸின் இராணுவத் தளபாடங்களை வாங்குவதில் 5 பெரிய கொள்வனவாளர் எமிரேட்ஸ் ஆகும்.
80 ரபேல் போர் விமானங்களை எமிரேட்ஸுக்கு விற்பது பற்றிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்டன. அந்த விற்பனையின் பெறுமதி 14 பில்லியன் எவ்ரோவாகும். அத்துடன் 12 கரக்கால் இராணுவ ஹெலிகொப்டர்களையும் எமிரேட்ஸுக்குப் பிரான்ஸ் விற்பனை செய்யும். அதையும் சேர்த்து ஒப்பந்தத்தின் பெறுமதி 17 பில்லியன் எவ்ரோவாகும்.
அதையடுத்து மக்ரோன் கத்தர், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்யவிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்