நாகாலாந்தில் சுரங்கத்தொழிலாளர்களைத் தீவிரவாதிகளென்று நினைத்துச் சுட்டுத் தள்ளியது இந்திய இராணுவம்.
மியான்மாருக்கு அருகேயிருக்கும் நாகாலாந்தில் எல்லையோரம் தீவிரவாதிகளைத் தேடி இந்திய இராணுவம் சுற்றிவருவதுண்டு. அப்படியொரு சந்தர்ப்பத்திலேயே ஒத்திங் என்ற மியான்மார் எல்லையிலிருந்து சுமார் பத்துக் கி.மீ தூரத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.
அப்பகுதியிலிருக்கும் சுரங்கத்துக்குப் பாரவண்டியில் போய்க்கொண்டிருந்த தொழிலாளர்களையே இந்திய இராணுவம் சுட்டுத் தள்ளியது. அச்சமயத்தில் தீவிரவாதிகள் அப்பகுதியில் வருவார்களென்ற துப்புக் கிடைத்து இராணுவத்தினர் அங்கே காத்திருந்திருக்கிறார்கள்.
பாரவண்டியிலிருந்த ஆறு தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டால் இறந்தார்கள். அதனால், கோபமடைந்த அப்பகுதி மக்கள் அங்கிருக்கும் இராணுவத் தளத்தையடுத்து நூற்றுக்கணக்கில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இராணுவ வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
அங்கே இரண்டு தரப்பாருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அவற்றில் மேலும் ஒன்பது கிராமத்தினரும், ஒரு இராணுவ வீரரும் கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நடந்த சம்பவங்களுக்காக இந்திய இராணுவமும், நாகாலாந்தில் முக்கிய அரசியல் பிரமுகர்களும் மக்களிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறார்கள். இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்குத் தலா 5 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. சம்பவங்கள் நடந்த இடத்துக்கு நாகாலாந்தின் முதலமைச்சர் விஜயம் செய்யவிருக்கிறார்.
நாகாலாந்தில் நீண்ட காலமாகவே இந்திய இராணுவத்துக்கு எதிராகக் கலவரங்கள் நடந்து வருகின்றன. அந்தப் பிராந்தியத்தில் வாழும் நாகா இன மக்கள் அதையடுத்துள்ள மியான்மாரில் தங்கள் இனத்தினரின் பகுதியையும் சேர்த்துத் தனி நாடாக்கும் எண்ணத்துடன் பல வருடங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்பிராந்தியத்திலுள்ள காடுகளுக்குள் வாழ்ந்துகொண்டு இரண்டு பக்கத்திலும் அவர்கள் இராணுவத்தினரைத் தாக்குவதுண்டு.
சாள்ஸ் ஜெ. போமன்