இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் தப்பியவர் இராணுவத் தளபதி வருண் சிங் மட்டுமே!

புதன் கிழமையன்று தமிழ்நாட்டில் பறந்துகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகிய இந்திய இராணுவத்தின்  Mi17V5 ஹெலிகொப்டர் விபத்தில் உயிர்தப்பியிருப்பவர் இராணுவக் குழுத் தலைவர் வருண் சிங் என்பவர் மட்டுமே என்று தெரிவிக்கப்படுகிறது. நேற்று உடனடியாக வெல்லிங்டன் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பெங்களூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சித் சிங் தெரிவித்தார்.

வெல்லிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியிலிருந்து சூலூருக்குச் அங்கிருந்து இந்தியப் பாதுகாப்புப்படைகளின் தளபதி பிபின் ரவாத்தையும் அவருடைய சகாக்களையும் வரவேற்று மீண்டும் வெல்லிங்டனுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் வருண் சிங். அச்சமயத்திலேயே அந்த விபத்து நடந்திருக்கிறது. 

இவ்வருடம் சௌரிய சக்ரா விருதுபெற்ற வருண் சிங் ஏற்கனவே இராணுவ விமான விபத்தொன்றில் ஈடுபட்டுத் தப்பியவராகும். குறிப்பிட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறால் விபத்துக்குள்ளாகியபோது தைரியமாக அவர் எடுத்த முடிவுகளுக்காகவே அவ்விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது தந்தையும் ஒரு இராணுவத் தளபதியாக இருந்து ஓய்வுபெற்றவர். ஓய்வுபெற்ற தந்தையார் உடனடியாக மகன் சிகிச்சைபெற்றுவரும் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அவர் வருண் சிங் உடல் நிலை பற்றி எதுவும் வெளியே சொல்ல மறுத்துவிட்டார்.

தளபதி வருண் சிங்கின் உடலில் 80 % எரிவுக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் ஆனாலும், அவரது உடல் நிலை தற்சமயம் ஸ்திரமாக இருப்பதாகவும் அதிகாரபூர்வமான செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை கடும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கே பத்திரிகையாளர்கள் உட்பட எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் அறிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்