பதினைந்து மாதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள இந்திய விவசாயிகள் முடிவு!

நரேந்திர மோடி அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய விவசாயிகள் சம்பந்தமான மூன்று சட்டங்களையும் எதிர்த்து டெல்லியில் முகாமிட்டுப் போராடிவந்த சம்யுக்தா கிஸான் மோர்ஷா என்ற பெயருடனான இந்திய விவசாயிகள் சங்கங்களின் தாய்க்குழு, தமது போராட்டங்களை முடித்துக்கொள்வதாக வியாழனன்று அறிவித்திருக்கிறது. சனிக்கிழமைக்கு முன்னர் அவர்கள் தமது போராட்ட முகாம்களை மூடிவிட்டு வெளியேறுவார்கள்.

பா.ஜ.க அரசு சமீபத்தில் பாராளுமன்றத்தில் விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்கி, விமர்சனத்துக்குரிய மூன்று சட்டங்களையும் வாபஸ் பெற்றது. ஆனாலும்,  சம்யுக்தா கிஸான் மோர்ஷா அரசு நேரடியாகத் தம்முடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட பின்னரே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு போராட்டத்தை நிறுத்துவதாகக் கூறியிருந்தது.

புதனன்று இந்திய அரசு தம்முடன் தொடர்புகொண்டு ஒரு ஒப்பந்தத்துக்கு வந்திருப்பதாக அறிவித்த சம்யுக்தா கிஸான் மோர்ஷா, அதன் பிரகாரமே தாம் டெல்லியில் அமைத்திருக்கும் மூன்று போராட்ட மையங்களிலிருந்தும் வெளியேறப்போவதாகத் தெரிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்