“வறுமைக்கு
விடுமுறையாம்”

நாங்கள் ஏழைகள்!

உடைந்த ஓசானை
ஒட்டவைத்தாலும்…

உலகக்கடல்களை
வற்றவைத்தாலும்…

என்றும்
இளமை மாறாதது
எங்கள் ஏழ்மை…!

கோயில் வாசலில்
காத்திருக்கும்
உண்டியல்மாதிரி
என்றும்_
எதிர்பார்ப்போடே
எங்கள்
இரவு பகல்கள்…!

ஒரு
முதிர்கன்னியின்
கல்யாணக்_
கனவுமாதிரியே
எங்களுக்கு
காரும் பங்களாவும்!

பசித்தவயிறும்
பு சித்த வயிறும்
பக்கத்து பக்கத்து
வீட்டில் தான்…
ஆனால் இதுவரை
சந்தித்ததே யில்லை!

எங்களுக்கு
இரு ஆத்மாக்கள்!
இரண்டாவதுஆத்மா
பட்டினி….!

எங்கள் வீட்டு
புல்லாங்குழலின்
துவாரங்களில்
வறுமை_
சிக்கிக் கொண்டதால்
காத்துக்கு கூட
கைகால் உளைச்சல்!

தற்கொலை
குற்றத்திற்காக
எங்கள் தங்கச்சி_
நல்லதங்காள்
சிறையில்….!
இப்போது மட்டும்
அவள்
பட்டினி கிடக்காத
பத்தினி!

சோசலிசக் கவி களும்
கொள்கை_
அறைகூவல்களும்
அரசாங்க விருந்தில்
செல்பி எடுக்க;
பதிவிறக்கம்
செய்யாத_
பரிதாபங்களாய்
எங்கள்
பாமரவர்க்கம்!

அவர்கள்
வாக்களிக்க
உரிமையை
தந்தார்கள்…
வாழ்க்கையளிக்கமட்டும்
விதியை
தருகிறார்கள்!

இப்போதெல்லாம்
வறுமை என்னும்
போதிமரங்களில்
புத்தர் களுக்கு
இட நெருக்கடி…!

என்
சாதிக்காரன் என்று
தோள் தட்டியவனே!
எங்களை கூப்பிட்டு
ஒருவேளை
சோறு தருவாயா?.

கட்சித்தொண்டனை
கட்டியணைத்த
தலைவா…!
எங்கள்
கூரையில் போட_உன்
கட்டவுட்டுக்களையாவது தா…!

எங்கள் நாட்டில்
கண்ணன்பிறந்தார்

கிறிஸ்து பிறந்தார்

நபிகள் பிறந்தார்..‌!

ஏழைகள்
நாங்கள் இன்னும்
மனிதனாய்
பிறக்கவில்லை!

எங்கள் நாட்டில்
மழைக்கும்
கொடை க்கும் கூட
விடுமுறை_
கிடைத்தது…
ஆனால் எங்கள்
வறுமைக்குமட்டும்
இன்னும்
விடுமுறையில்லை!

எழுதுவது : மயூரி சீத்தாராமன்