வரவிருக்கும் நிதி ஆண்டில் தமது வரவு செலவுத் திட்டத்தில் உபரியாக நிதி இருக்கும் என்கிறது சவூதி அரேபியா.

பல ஆண்டு காலங்களாகத் தனது வரவுசெலவுத் திட்டத்தின் பின்னர் நிதிப் பற்றாக்குறையைக் காட்டிவந்த சவூதி அரேபியா 2022 நிதியாண்டில் தம்மிடம் 23.99 பில்லியன் டொலர் பெறுமதியான நிதி மேலதிகமாக இருக்கும் என்று கணித்திருக்கிறது. 2014 இல் சர்வதேசச் சந்தையில் எரிநெய்விலை வீழ்ச்சி ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாகத் தமது கஜானா நிரம்பி வழிவதாக நாட்டின் வர்த்தக அமைச்சர் முஹம்மது பின் அப்துல்லா அல்-யதான் குறிப்பிட்டிருக்கிறார்.

“உபரியாக இருக்கும் தொகை அரசின் நிதிக்கையிருப்பை அதிகரிக்கவும், கொவிட் 19 ஆல் ஏற்பட்ட இழப்புக்களைச் சரிசெய்யவும், எதிர்காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களைச் சவூதி அரேபியா எதிர்கொள்ளத் தேவையான பலத்தை உண்டாக்கிக்கொள்ளவும் பயன்படுத்தப்படும்,” என்று பட்டத்துக்குரிய இளவரசன் முஹம்மது பின் சல்மான் தெரிவித்தார்.

சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் எரி நெய் விலை அதிகரிப்பும், சவூதி அரேபிய அரசின் பொதுச்சேவைகளுக்கான செலவுக் குறைப்புமே உபரியாகக் கஜானாவில் நிதி உண்டாகக் காரணமாகும். அடுத்த வருடம் 254.6 பில்லியன் டொலரை சவூதி அரேபிய அரசு செலவிடும். அது 2021 செலவைவிடவும் 6 % குறைவானதாகும். இராணுவச் செலவும் 10 விகிதத்தால் குறைக்கப்படும்.

சாள்ஸ் ஜெ. போமன்