எனதருமை மகளே | மகளை நோக்கி தாய் பேசும் கவி வரிகள்

உன்னை ஈன்றெடுத்த அன்று உன் அழுகை சத்தம் கேட்டு நான்
என் வலி மறந்து துடித்தேனடி
என் அருமைக் கண்மணியே!

என் அன்னையின்
அருமையை அறிந்தேனடி
அன்று தான்!

உன் முகத்தின்
ஒளியைக் கண்டு
என்னை மறந்தேனடா
அன்பு கண்மணியே!

என்னருமை மகளே
நீ நடந்து வரும் போது உன் பிஞ்சு பாதங்களுக்கு பஞ்சு மெத்தையாக நான்!

உன் மழலை மொழி கேட்கையில்
அந்த யாழும்
தோற்றுப் போகுமே
என் கண்ணே!

உன் சிரிப்பு சத்தம் கேட்கும் போது
அலைகடலென பொங்குகிறது என் மனம்
என் அன்பு மகளே!

அம்மா என்று அழைத்த முதல் வார்த்தைக் கேட்டு நான் அடைந்த
மகிழ்ச்சிக்கு அளவுகோல் இல்லையே
என் கண்ணே!

கன்னத்தில் நீ கொடுக்கும் முத்தத்திற்கு ஈடு இணை
இவ்வுலகில் எதுவும்
இல்லையடி
என் ஆசை மகளே!

முதல் நாள்
பள்ளி சென்று
திரும்பும்
உன்னை இறுக்கி
அணைக்கும் போது
நான் அடைந்த
இன்பத்திற்கு அளவே
இல்லையடா
என் பொன் மகளே!

ஒன்றும் தெரியாத
பாவனையில்
உன் உதட்டைச்
சுழிக்கும் அழகிற்கு
ஊர்வசி மேனகை
காணாமல் போனார்களே
என் அருமை கண்மணியே!

என்னுயிர் கண்மணியே
உன்னை நான்
ஈன்றதால்
இவ்வுலகின்
கண்களுக்கு
அன்னையானேன்
என் செல்வமே!

எழுதுவது :விஜயலட்சுமி