சினிமாக்களைத் தணிக்கை செய்வதை முழுவதுமாக நிறுத்தப்போவதாக எமிரேட்ஸ் அறிவித்திருக்கிறது.
தனது நாட்டை எல்லோருக்கும் திறந்த ஒரு நாடாக மாற்றும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது எமிரேட்ஸ். சமீபத்தில் அரச ஊழியர்களுக்கு வாரத்தில் நாலரை நாட்களை வேலை நாட்களாக அறிவித்த உலகின் முதல் நாடான எமிரேட்ஸ் நாட்டில் வெளியிடப்படும் சினிமாக்களைத் தணிக்கை செய்யப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது.
இஸ்லாமியப் பழமைவாதிகளைக் கோபமூட்டும் சம்பவங்களைச் சினிமாக்களிலிருந்து இனிமேல் எமிரேட்ஸ் வெட்டியெறியாது. பதிலாக, + 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அப்படியான சினிமாக்களைக் காணும் அனுமதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
“சர்வதேச அளவில் ஒரு சினிமா எப்படித் திரையிடப்படுமோ, அதே விதத்திலேயே எமிரேட்ஸிலும் காட்டப்படும்,” என்று நாட்டின் கலாச்சார அமைச்சின் டுவீட் குறிப்பிடுகிறது.
எமிரேட்ஸ் உட்பட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வெளியிடப்படும் சினிமாக்கள் நிர்வாணம், ஓரினச்சேர்க்கை, மென்மையான உடலுறவுக் காட்சிகள் போன்றவை வெட்டப்பட்ட பின்னரே திரையில் காட்டப்பட்டு வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்