ஏறிவரும் எரிபொருட்கள் விலைகளைக் கருத்தில் கொண்டு அயர்லாந்து குடும்பத்துக்கு 100 எவ்ரோ மான்யம் கொடுக்கவிருக்கிறது.
இதுவரை காணாத வகையில் குறுகிய காலத்தில் சர்வதேச ரீதியில் எரிபொருட்களுக்கான விலை அதிகரித்திருக்கின்றது. எரிநெய் மட்டுமன்றி மின்சாரம் உட்பட்ட மக்களுக்கு அத்தியாவசியமானவைகளின் விலைகள் உயர்ந்ததால் பெரும்பாலானோர் வாழ்க்கை நிலை பாதிக்கப்படுகிறது. அதைக் கருத்தில் கொண்டு பல நாடுகளும் தமது குடிமக்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகையை மான்யமாகக் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.
அயர்லாந்து அரசும் அதுபோலவே தமது நாட்டவருக்குக் குடும்பத்துக்கு நூறு எவ்ரோவை மான்யமாகக் கொடுக்கவிருக்கிறது. நாட்டின் 2.1 மில்லியன் குடும்பங்களுக்கு உதவுவதற்காக 210 மில்லியன் எவ்ரோ ஒதுக்கப்பட்டு அவை எந்த வித விண்ணப்பங்களும் இல்லாமல் சகலருக்கும் வரும் வசந்த காலத்த்தில் கொடுக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் சில மாதங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டிருக்கும் காலநிலை மாற்றங்களின் மோசமான விளைவுகளுக்கு முட்டுக்கட்டை போடும் பல நடவடிக்கைகளும் ஏறியிருக்கும் எரிபொருட்களின் விலைகளுக்கு ஒரு முக்கிய காரணமாகும். எனவே, அங்கத்துவ நாடுகள் அதனால் ஏற்படும் பாரத்தைத் தாங்கிக்கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் நிதியை ஒதுக்கியிருக்கிறது. அங்கத்துவ நாடுகள் அதிலிருந்து தமது மக்களுடைய பொருளாதாரச் சுமையைக் குறைக்க உதவலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்