நாட்டு மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்காக உப்பு மீது வரி கொண்டுவரவிருக்கும் தாய்லாந்து.

அளவுக்கு அதிகமாக உணவில் உப்பைக் கலந்து சுவையூட்டுவது சில கலாச்சாரங்களின் வழக்கம். அதன் விளைவு அந்தச் சமூகம் பல சுகவீனங்களுக்குள்ளாகின்றது. தாய்லாந்திலும் அதே நிலைமை இருப்பதால் இவ்வருடம் உப்பு மீது பிரத்தியேக வரி விதிப்புக் கொண்டுவரப்படவிருந்து ஒத்திவைக்கப்பட்டது. அந்த வரி அடுத்த வருடம் அமுலுக்கு வரலாம் என்று, தாய்லாந்தின் “உணவில் உப்புக் குறைப்பு” அமைப்பின் தலைவர் சுரசாக் கந்தாசுவேசிரி தெரிவித்தார்.

“எங்கள் கலாச்சாரத்தில் உப்பால் உபரிச் சுவையூட்டப்பட்ட உணவுகளான மீன் கருவாடு, உப்பூறிய இறைச்சி, காய்கள் போன்றவைகளைப் பாவிப்பது வழக்கம். அதனால் தாய்லாந்தில் சராசரியாக ஒருவர் தினசரி சுமார் ஒன்றரைத் தேக்கரண்டி உப்பை உட்கொள்கிறார். அது உலக ஆரோக்கிய அமைப்பினால் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று வரையறுக்கப்பட்ட அளவை விட இரண்டு மடங்கானது,” என்கிறார் சுரசாக் கந்தாசுவேசிரி.

தாய்லாந்தின் சுமார் 10 விகித மக்கள் சிறு நீரகம் சம்பந்தப்பட்ட வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தச் சுமார் 7 மில்லியன் பேரின் சுகவீனங்களுக்குக் காரணம் அளவுக்கதிகமான உப்புப் பாவிப்பே என்று குறிப்பிடப்படுகிறது. எனவே மக்களின் உப்புப் பாவிப்பைப் பத்து விகிதத்தால் குறைப்பதற்காகவே தயாரிக்கப்பட்டு விற்கப்படும் உணவிலிருக்கும் உப்புக்கு வரிவிதிக்க தாய்லாந்து அரசு முடிவெடுத்திருக்கிறது.

பாவனைக்குத் தயாராக அடைக்கப்பட்டிருக்கும் உணவிலிருக்கும் உப்புக்கு வரிவிதிக்கும் நாடுகள் ஏற்கனவே உலகில் உண்டு. ஹங்கேரி, போர்த்துக்கால், பிஜி ஆகியவை அதற்கு உதாரணமாகும். சக்கரை சேர்த்த உணவுக்கு மேல் தாய்லாந்து 2017 இல் வரி விதித்து அதன் மூலம் நாட்டு மக்களின் சக்கரைப் பாவிப்பைக் குறைத்திருக்கிறது.

தாய்லாந்து கொண்டுவரவிருக்கும் சட்டம் உணவு நிறுவனங்களுக்குச் சுமார் 1 – 2 வருடங்கள் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள அவகாசம் கொடுக்கும். ஆனால், அப்படியான ஒரு சட்டம் கடும் எதிர்ப்பைச் சந்திக்கலாம் என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது. உதாரணமாக, உடனடியாகக் கொதிநீரில் போட்டு உணவாக்கக்கூடிய நூடுல்ஸ் சூப்பில் ஒரு நபருக்கு ஒரு நாளில் தேவையான 80 % உப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சாள்ஸ் ஜெ. போமன்