வெளிநாட்டவர்களை அடைக்க டென்மார்க் கொசோவோவில் சிறை வாடகைக்கு எடுத்திருக்கிறது.
தமது சிறைகளில் இருக்கும் வெளிநாட்டுக் குற்றவாளிகளில் கடைசிச் சிறைவருடங்களைக் கழிப்பவர்களுக்காக கொசோவோவில் 300 சிறை இடங்களை வாடகைக்கு எடுக்கப்போவதாக டென்மார்க் அறிவித்திருக்கிறது. அவர்கள் தமது தண்டனை முடிந்தபின் தமது நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்று நாட்டின் நீதியமைச்சு தெரிவித்திருக்கிறது.
தமது நாட்டுச் சிறைகளுக்கு மேலும் 326 இடங்களைப் பெற்றுக்கொள்ளவே டென்மார்க் இந்த முடிவை எடுத்திருக்கிறது. டென்மார்க்கின் சிறைச்சாலைகள் முழுக்கவும் நிரம்பிவிட்டன. அது சமீப வருடங்களில் நிறைந்து போய் 4,000 பேராகியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேயளவில் தொடர்ந்தும் குற்றவாளிகள் அதிகரிப்பார்களானால் 2025 இல் டென்மார்க்கின் சிறைகளில் 1,000 பேருக்கான இடத்தட்டுப்பாடு உண்டாகும் என்கிறார் நீதியமைச்சர். கொசோவோவுடன் செய்துகொண்டிருக்கும் உடன்பாட்டின் மூலம் 300 இடங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கொசோவோவின் சிறைகள் 97 % நிறைந்திருக்கின்றன. இதற்கு முன்னர் நோர்வே, பெல்ஜியம் ஆகிய நாடுகள் நெதர்லாந்துச் சிறையில் இடங்களை வாடகைக்கு எடுத்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்