புலம்பெயர்ந்தவர்களை நாடு திரும்பி வந்து முதலீடு செய்யும்படி கூறி மான்யத்தொகையை அறிவிக்கிறது கிரவேஷியா.
வயதாகிவரும் குடிமக்கள், குறைந்துவரும் சனத்தொகை ஆகிய இரண்டும் சேர்ந்து நாட்டைப் பலவீனமடையச் செய்வதால் கிரவேஷிய அரசு தனது நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வேறு நாடுகளை நாடிச் சென்றவர்களை மீண்டும் இரு கை நீட்டி வரவேற்கும் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. நாட்டின் பிரதமர் ஆண்டிரேய் பிளென்கோவிச் புலம்பெயர்ந்து சென்றவர்கள் திரும்பிவந்து கிரவேஷியாவில் முதலீடு செய்தால் அவர்களுக்கு 26,000 எவ்ரோ மான்யமாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் 4.5 மில்லியன் குடிமக்களைக் கொண்டிருந்த கிரவேஷியா இப்போது 3.8 மில்லியனாகச் சுருங்கிவிட்டது. கடந்த 70 ஆண்டுகளாகவே நாட்டின் குடிமக்கள் தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் படித்த இளம் கிரவேஷியர்களுக்குத் தமது கதவுகளைத் திறந்துவிட்டிருப்பதால் அவர்கள் தமது பிள்ளைகளுடன் புலம்பெயர்ந்து செல்வது அதிகரித்திருக்கிறது.
“சமீப காலத்தில் எங்கள் நாட்டைவிட்டு வேலைவாய்ப்புத் தேடிப் பக்கத்து நாடுகளுக்குச் சென்றவர்களை நோக்கியே இந்த வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறது. சிலர் அதை ஏற்று நாடு திரும்பக்கூடும். அவர்களுக்கு உதவ அரசு காத்திருக்கிறது,” என்கிறார் பிளென்கோவிச்.
சாள்ஸ் ஜெ. போமன்