சீனர்கள் பிள்ளை பெற்றுக்கொள்வது பெருமளவு குறைந்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

2020 இல் 1,000 பேருக்கு 8.52 பிள்ளைகள் என்றிருந்த சீனாவின் பிள்ளைப் பேறு இலக்கம் 1,000 க்கு 7.52 ஆகக் குறைந்திருப்பதாகச் சீன அரசின் புதிய புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவருகிறது. தம்பதிகளுக்கு ஒரேயொரு பிள்ளை என்றிருந்த சட்டத்தை 2016 இல் சீனா வாபஸ் வாங்கிக்கொண்டாலும் நாட்டில் ஏறிவரும் வாழ்க்கைச்செலவுகள் அதிகரிப்புக் காரணமாகப் பெரும்பாலானோர் கல்யாணம் செய்வதைத் தள்ளிப் போடுவதுடன் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதையும் தவிர்த்து வருகிறார்கள்.

சீன அரசு 1949 இல் தனது குடிமக்கள் பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரிக்கத் தொடங்கிய பின்னர் முதல் தடவையாகப் பிள்ளைப் பெறுதல் சீனாவில் பெருமளவு குறைந்திருப்பதாக இந்த விபரங்கள் காட்டுகின்றன. சீனர்களின் வெளிநாட்டுப் புலம்பெயர்வுகளுக்குப் பின்னர் கணக்கிட்டால் நாட்டின் குடிமக்கள் தொகை வெறும் 0.034 % மட்டுமே அதிகரித்திருக்கிறது. 1960 க்குப் பின்னர் சீனாவின் குடித்தொகை வளர்ச்சி மிகக்குறைவாக இருப்பது கடந்த வருடத்தில் தான்.

பிள்ளைப்பேறுகள் குறைந்துவரும் அதே சமயம் சீனாவின் குடிமக்களில் வயதாகி ஓய்வு பெறுவோரின் பங்கு வேகமாக அதிகரித்திருப்பது குறித்துச் சீன அரசு பெரும் கிலேசம் கொண்டிருக்கிறது. காரணம், வயதானவர்கள் தொகை வேகமாக அதிகரிக்கும்போது நாட்டின் புதிய குடிமக்கள் தொகையும் குறையுமானால் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பெருமளவில் தாக்கும் என்பதாகும்.

அதை மெய்ப்படுத்தும் விதமாகச் சீனாவின் பொருளாதார வளர்ச்சி கால் நூற்றாண்டுக்குப் பின்னர் மந்தமடைந்து வருவதையும் புள்ளிவிபரங்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்