பிரான்ஸ், சுவிஸ், சுவீடன் நாடுகளின் மொத்த பில்லியனர்களை விட இந்தியாவில் பில்லியனர்கள் அதிகமாகியிருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்கள் தமது சொத்துக்களின் பெறுமதியைப் பல மடங்கால் கடந்த வருடம் கூட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை 40 புதிய பில்லியனர்கள் கடந்த வருடத்தில் உருவாகியிருக்கிறார்கள். மொத்தமாக 142 இந்திய பில்லியனர்களின் சொத்துக்களின் பெறுமதி 720 பில்லியன் டொலரையும் விட அதிகம் என்று புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. அச்சொத்துக்கள் இந்தியாவின் 40 % வறிய இந்தியர்களின் ஒன்றுகூட்டிய சொத்துப் பெறுமதியை விட அதிகமாகும்.

உலகிலிருக்கும் மொத்தமான ஊட்டச்சக்திக் குறைவானவர்களில் 25 % க்கும் அதிகமானவர்களைக் கொண்ட இந்தியாவில் அரசு 2016 இல் தனியார் சொத்துக்களுக்கான வரியை நீக்கியது. மறைமுக வரிகள் அதிகரிக்கப்பட்ட அதே சமயம் நிறுவனங்களுடைய இலாபத்துக்கு மேலான வரிகள் குறைக்கப்பட்டன. நாட்டின் ஆகக்குறைந்த தினசரிச் சம்பளமோ ஐ.நா-வின் புள்ளிவிபரங்களின்படி 2020 இல் 178 ரூபாயாக இருக்கிறது. 

இந்திய அரசு தனது திணைக்களங்கள், அமைச்சுகளுக்கான நிதியைக் குறைந்துக்கொண்டு கல்வி, ஆரோக்கியம் ஆகிய துறைகளில் தனியார்களின் நிறுவனங்கள் உருவாகி வளர்வதை ஊக்குவிக்கிறது. 84 விகிதமான இந்தியக் குடும்பங்களின் வருமானங்கள் கொரோனாக் காலத்தில் கணிசமாக வீழ்ச்சியடைந்து சகாராப் பிராந்தியத்துக்கு ஈடாக மாறியிருப்பதாக Oxfam அமைப்பு தெரிவிக்கிறது. 

இந்திய அரசு தனது அதிபணக்காரர்களின் சொத்து மதிப்பில் ஒரு விகிதத்தை வரியாக எடுத்து நாட்டின் கல்வித்துறையும் முதலீடு செய்யவேண்டுமென்று Oxfam அமைப்பு இந்திய அரசுக்குப் பிரேரிக்கிறது. நாட்டின் முதல் பத்துச் செல்வந்தர்களின் சொத்துப் பெறுமதியே இந்தியாவின் குழந்தைகளுக்கான அடிப்படைக் கல்வி முதல் உயர்கல்வியைக் கொடுக்க 25 வருடங்களுக்குப் போதுமானது என்று சுட்டிக் காட்டுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்