கொலான் குன்றுப்பகுதிகளில் ஐந்து வருடங்களில் குடியேற்றங்கள் இரட்டிப்பாக்கப்படும் என்கிறது இஸ்ராயேல்.
சிரியாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொலான் குன்றுகளின் பிராந்தியத்தில் இஸ்ராயேல் தனது பிடியை மேலும் இறுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. 2019 இல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அப்பகுதியை இஸ்ராயேலுக்கு உரிமையானது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். ஜோ பைடன் ஆட்சியில் அதே நிலைப்பாடே தொடர்கிறது.
“சிரியாவிடமிருந்து இஸ்ராயேல் தன்னைக் காத்துக்கொள்ள கொலான் பிராந்தியத்தின் மீதான கட்டுப்பாடு அவசியம்,” என்று சமீபத்தில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பிளிங்கன் குறிப்பிட்டிருந்தார். தனது வன்ம எதிரியான ஈரானுடைய நட்பைக் கொண்டிருக்கும் சிரியாவில் ஈரானிய இராணுவமும் தளங்களைக் கொண்டிருக்கிறது. அங்கிருந்து இஸ்ராயேலை அடிக்கடி தாக்கவும் செய்கிறது.
சமீபத்தில் இஸ்ராயேல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டுமானத் திட்டங்களின்படி 7,300 வீடுகள் முதல் கட்டமாகக் கட்டப்படும். அதையடுத்து மேலும் 4,000 வீடுகளைக் கட்டும் திட்டமும் இருப்பதாகத் தெரியப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக சுமார் 23,000 யூதர்கள் அங்கே குடியேற்றப்படுவார்கள்.
1967 போரில் சிரியாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொலான் பிராந்தியம் சுமார் 1,200 ச.கி.மீ பரப்பளவுள்ளது. அப்பகுதி இஸ்ராயேல் சிரியாவைக் குன்றுகளிலிருந்து கண்காணிக்க உதவுவதுடன், விவசாயத்துக்கும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்