தலிபான்களை ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களாகத் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்கிறது ஈரான்.
ஞாயிறன்று தெஹ்ரானில் ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களான தலிபான்களின் பிரதிநிதிகளுடன் ஈரானிய வெளிவிவகார உயரதிகாரிகள் அமைச்சர் ஹுசேன் அமிரப்துலஹியான் தலைமையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். தலிபான்கள் ஆப்கானிய அதிகாரத்தை அடைந்த பின்னர் இதுவே அவ்விரண்டு நாடுகளுக்கு இடையேயான முதலாவது உயர்மட்டப் பேச்சுவார்த்தை ஆகும்.
அதன் பின்னர் ஈரான் வெளியிட்ட அறிக்கையின்படி தற்போதைய நிலைமையில் தலிபான்களை உத்தியோகபூர்வமாகத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிட்டது. ஆப்கானிஸ்தானில் சகல இனத்தவரையும், அரசியல் கட்சியினரையும் கொண்ட ஒரு அரசாங்கத்தை மட்டுமே தாம் ஆதரிக்க முடியும் என்று ஈரான் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதுபற்றிப் பேச ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஈரானிய அரசு ஒரு பிரதிநிதியை காபுலுக்கு அனுப்பியிருக்கிறது.
“ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை ஈரானுக்கு விசாரத்தை உண்டாக்குகிறது. அந்த அடிப்படையிலேயே இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன,” என்பது ஈரானிய நிலைப்பாடாகும்.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போட்டிருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிவகைகள் செய்யவேண்டுமென்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன் ஆப்கானிஸ்தானுக்கான அப்படியான உதவிகளை ஈரான் தொடர்ந்தும் கொடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்