அறியப்படாத தமிழகம் – அன்றாட வாழ்வுக்கூறுகளை இலகுவில் கட்டுரைகளில் சொல்லிச்செல்லும் அழகு

அறியப்படாத தமிழகம் இந்த நூலை எழுதியவர் தொ.பரமசிவன் அவர்கள் .


கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று தொ.ப. வின் இந்த நூலில் இருந்து தைப்பொங்கலின் சிறப்பு குறித்து முகநூலில் பார்த்த பதிவு ஒன்று தான் இந்த புத்தகத்தை வாசிக்க தூண்டியது. 2020-ன் இறுதியில் அவரது மறைவைத் தொடர்ந்து நாளிதழ்களில் வெளியான பல கட்டுரைகளும் அவரது ஆய்வுகள் மற்றும் நூல்களின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது.


இந்த புத்தகத்தில் ஏழு தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது. நாம் எளிதாக கடந்து போய் விடுகிற அன்றாடங்களின் கூறுகள் தான் இக்கட்டுரைகளின் மையம்.


வாசகனுக்கு வெறுமனே தகவல்களை மட்டும் தந்து விட்டுப் போகும் ஒரு கட்டுரை நூலாக நினைத்து கடந்து விட முடியவில்லை. முன்னுரையில் ஆசிரியர் சொல்வதைப் போன்று தமிழக பண்பாடு குறித்த ஆழமான விவாதங்களுக்கு இட்டுச் செல்லும் கருத்துக்களை இந்நூல் கொண்டுள்ளது.


தமிழர்களின் வாழ்வியல் என்பதை ஒரு சில மேல்தட்டு சாதிய, வர்க்க அடையாளங்களுக்குள் சுருக்கி விடாமல் பரந்த பார்வையோடு இந்த ஒட்டுமொத்த நிலமும், மொழியும் வரலாற்றின் வழிநெடுகே மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

எளிய மக்களின் அன்றாடங்களின் பின்னுள்ள பண்பாட்டு விளக்கங்கள் வியக்க வைக்கின்றன.
தைப் பொங்கலின் சிறப்பு குறித்து எழுதியிருக்கும் ஆசிரியர், சமய எல்லைகளைக் கடந்த திருவிழாவாக இது அமைவதை கோடிட்டு காட்டுகிறார்.

இந்த நூல் நயப்பை எழுதும் என் சொந்த ஊரான குமரி மாவட்டத்தில் எல்லா கத்தோலிக்க தேவாலயங்களிலும் பொங்கல் விழா, சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு விழாவாக இருக்கிறது. அதை மெய்ப்படுத்துவதாக பிறப்பு, இறப்பு போன்ற நிகழ்வுகளால் பாதிக்கப்படாத விழாவாகவும் பொங்கல் விழா திகழ்வதாக சொல்கிறார் ஆசிரியர் தொ.ப..


தென்னிந்திய பக்தி இயக்க மரபு, இறைவன் ஒருவனே ஆண் என்றும், மனித உயிர்கள் எல்லாம் பெண் என்றும் கூறும் பதிவு ஆச்சரியமூட்டுகிறது.

பல்லாங்குழி விளையாட்டினூடே தனிச் சொத்துரிமையை நியாயப்படுத்தும் உணர்வுகள் பரப்பப்பட்டதும், விளையாட்டுக்கும், சூதுக்கும் இடையேயுள்ள தொடர்பும் நுட்பமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


தமிழகத்தில் பெளத்தமும், சமணமும் ஏற்படுத்திய தாக்கங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு சமணம் தொண்டாற்றிய செய்திகள் இன்னும் பரவலாக வாசிக்கப்பட வேண்டும்.
தமிழர்களின் உடல்நலம் சார்ந்ததாக பேசப்பட்ட அழகு இன்றைய காலகட்டத்தில் மனிதத் தோலின் நிறமாக பேசப்படுவது எப்படி என்பதற்கு ஆசிரியரின் பதில் துல்லியமானதாகவே தோன்றுகிறது.
தமிழ் மொழியின் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும் அன்பும், நேசமும் கொண்டவர்கள் அனைவரும் கட்டாயம் வாசித்து, விவாதிக்க வேண்டிய முக்கியமான நூல் இது.

நீங்களும் ஒருமுறை வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்

எழுதுவது : காட்வின் ஜினு , குமரி மாவட்டம்