தரணி போற்றும் தமிழர் திருநாள்

தலைசாய்ந்தக் கதிரெல்லாம் திரளாகக் கூட்டியே
மலையாகக் குவித்தவற்றை வீட்டுக்கு சேர்த்திட
தீச்சுடரோனுக்கு நன்றிகளை நவின்று பணிந்திட
தன்னோடு உழைத்த கால்நடைகளையும் வணங்கிட

தாத்தா பாட்டி தாய்மாமன் அத்தையென
தனயன் தம்பி தங்கை அக்காவெனவே
தனையீன்ற பெற்றோர் பேத்தி பேரன்களோடே
தங்குருதிச் சொந்தங்களோடே உள்ளம் நெகிழ

தன்னுடைய உறவுகளையும் சேர்த்தே இணைத்து
தன்னகத்தின் அருகிலிருக்கும் நட்பு வட்டங்களோடு
தனக்கென மட்டும் உழைக்காத உழவனின்
தன்னிகரில்லாத் தமிழனின் பொங்கல் திருநாள்!

திறம்பட வேலை செய்யும் கலன்களோடே
தலையெடுத்திட தான் செய்யும் தொழிலெல்லாம்
தனமும் நலமும் பொங்கியே நிறைந்திட
தங்கு தடையின்றி திரவியங்களைத் தந்திட

தையல்கள் இளைஞர்களின் திருமணமும் கூடிட
திமிரோடு காளைகளோ வாசல் தாண்டிட
துணிவோடே வீரங்காட்ட ஆடவர்கள் விழைந்திட
திரளாக மக்கள் கூடியிருந்து ஊக்கிக் களித்திட

தகைசால் பெரியோர்கள் ஆசிகளை வழங்கிட
தேசமெல்லாம் இருக்கும் தமிழர்கள் உவகையுற
தனிச்சிறப்பு கொண்டிருக்கும் மாதவ மகளே!
தை தை என்று வந்தாளே தைமகளவளே!

தாயாகக் கொண்டத் தமிழமுதைப் ஏத்திடும்
தரணியே போற்றும் தமிழர் திருநாளிதுவே!

எழுதுவது ;

கவிஞர் மாலதி இராமலிங்கம்,
புதுச்சேரி.