சிறீலங்காவின் முன்னாள் சிறைச்சாலைகள் உயரதிகாரிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு.
2012 நவம்பரில் சிறைச்சாலைக்குள் வைத்து 8 கைதிகளைக் கொன்ற குற்றத்துக்காக நாட்டின் சிறைச்சாலைகளின் முன்னாள் உயரதிகாரி எமில் லமஹேவாகேவுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. அக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பொலீஸ் உயரதிகாரி நாமல் ரங்கஜீவா மீதான ஆதாரங்கள் போதாது என்று அவரை வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவித்தார் நீதிபதிகள்.
மொத்தமாக 27 சிறைக்கைதிகள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டாலும் எட்டுப் பேரைக் கொன்றதற்கான ஆதாரங்களே ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களைக் கொன்றபின்னர்,ம் கைதிகள் ஆயுதங்களைக் கைப்பற்றிச் சிறைக்குள் கலவரம் உண்டாக்கத் திட்டமிட்டதாக உயரதிகாரிகள் ஆதாரங்களைச் சோடித்ததாக வழக்கறிஞர்கள் குறிப்பிட்டார்கள்.
இதே குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் காணாமல் போயிருக்கும் இந்திகா சம்பத் மீதான குற்றங்களைத் தொடர்ந்தும் விசாரிக்க பொலீசார் முடிவு செய்துள்ளனர்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட லமஹேவாகேவை வெலிக்கடைச் சிறைச்சாலையில் பாதுகாக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜனாதிபதி நிர்ணயிக்கும் நாளொன்றில் அவர் தூக்கிலிடப்படுவார்.
சாள்ஸ் ஜெ. போமன்