நாட்டை முடக்கிவிட்டு நடந்த விருந்து: மன்னிப்புக் கோருகிறார் ஜோன்சன் பதவியை இழக்கும் இக்கட்டில் அவர்.

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா பொது முடக்க காலத்தில்நாட்டு மக்களை வீடுகளில் அடைத்துவிட்டுத் தனது டவுணிங் வீதி அலுவலகத்துக்குப் பலரை அழைத்து ஒன்று கூட்டி விருந்துபசாரம் நடத்தினார் எனக்கூறப்படுகின்ற விவகாரம் அவரது பதவிக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது.

அரசியலில் சூடுபிடித்திருக்கின்ற இந்தவிருந்து தொடர்பில் பிரதமர் ஜோன்சன் முதல் முறையாகத் தனது மன்னிப்பை வெளியிட்டிருக்கிறார்.

உத்தியோகரீதியான ஒரு கூட்டம் என்று எண்ணியேபலரை அங்கு அழைத்ததாக அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.நோய்த் தடுப்புப் பணிகளை நிர்வகிக்கின்ற தனது அதிகாரிகளை உற்சாகப்படுத்துவதற்காகவே தொழில் முறையான அந்தக் கூட்டத்துக்குத் தான் அழைப்பு விடுத்தி ருந்தார் எனவும், விருந்து நடைபெற்ற பூங்கா தனது பணியிடத்தின் ஒரு நீட்சியே என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த 2020 மே மாதம் நாடு முதலாவதுமுடக்கத்தில் இருந்த சமயத்திலேயே”நம்பர் 10, டவுணிங் வீதி”அலுவலகத்தின்பூங்காவில் பலர் ஒன்று கூடிய குடிபானவிருந்து நடந்தது. பிரதமர் ஜோன்சன்அவரது துணைவியார் உட்பட முப்பதுபேர் அதில் பங்குபற்றினர் என்பதைச்சாட்சிகள் உறுதி செய்துள்ளன.வெளி இடங்களில் ஒருவருக்கு மேல் ஆட்கள் கூடுவதுகூடத் தடுக்கப்பட்டிருந்த- மிகஇறுக்கமான- கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தனது அலுவலகத்துக்கு வருமாறுபலரை அழைத்ததைப் பிரதமர் ஒப்புக்கொண்டிருப்பதால் அந்தத் தவறுக்காகஅவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளன.

எனினும் அவரது அமைச்சரவை அவருக்கு முழு ஆதரவை வெளியிட்டுள்ளது.பிரதமரது அலுவலகத்துக்கு வெளியேசிலர் எதிர்ப்புத் தெரிவிக்கும் பதாகைகளுடன் கூடியுள்ளனர். அங்கு விருந்துநடைபெற்ற மே மாதத்தில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் சிலரின் உறவினர்களது கருத்துக்களை பிபிசி ஒளிபரப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜோன்சன்”சட்டத்தை மீறிவிட்டார்,பொய் கூறி விட்டார், தனது அலுவலகத்தை இழிவுபடுத்திவிட்டார்” என்று கோஷம் எழுப்பினர்.

“நாங்கள் ஒக்சிஜன் கருவிகளைப்பொருத்திக் கொண்டிருந்த சமயத்தில்அவர்கள் கூடிக் குலவிக் குடிபானம் அருந்திக் கொண்டிருந்தனர்” என்றுமருத்துவப் பணியாளர் ஒருவர் கூறியதை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அலுவலகத்தில் விருந்து நடந்தது என்ற குற்றச்சாட்டு வெளியாகிய ஆரம்பத்தில்அதனைத் தொடர்ந்து மறுத்துவந்தவர் பொறிஸ் ஜோன்சன். நீண்ட காலத்தின் பின்னர் இப்போது அவர் அதனை ஒப்புக்கொண்டிருப்பது அரசியலில் அவரது நிலையை மிகவும் பலவீனப்படுத்தியிருக்கிறது.

பொறிஸ் ஜோன்சன் அரசில் சுகாதாரஅமைச்சராக இருந்த மற் ஹான்கொக் (Matt Hancock) கொரோனா சுகாதார விதிகளை மீறிப் பெண் ஒருவரை முத்தமிடுகின்ற கண்காணிப்புக் கமெரா காட்சிவெளியாகியதை அடுத்துக் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமாச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. –

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.