ஏறு தழுவுதல்
மணக்கும் பொங்கல் தைத்திருநாளில் நடக்கும்
மரபுவழி விளையாட்டுகளில் ஒன்று அது!
மாடுகளை ஓடவிட்டு மனிதர்கள் அடக்கும்
மறமிகுந்த தமிழர்களின் விளையாட்டே அது!
சல்லிக்காசெனும் நாணயங்களைத் துணியில் முடித்து
சல்லிக்கட்டு மாட்டின் கொம்புகளில் கட்டிவைத்து
சாதுரியமாக மாட்டை அடக்கும் வீரர்களுக்கு
சன்மானமாகப் பணமுடிப்பும் வெற்றியும் இலக்கு!
ஊரார்கள் முன்னிலையில் காளையை அடக்கினால்
உரியவன் இவனென மங்கையும் மாலையேந்துவாள்!
கன்னியரைக் கவருகின்ற வீரமே மனைவியாக்கும்!
காதலனானக் கண்ணாளனையோ கணவன் ஆக்கும்!
கொல்லக் கூடிய காளையை அடக்குவதே
கொல்லேறு தழுவலென என்பார்கள் அதனாலே!
உலகளவில் சிறந்ததாக இருப்பது சல்லிக்கட்டு!
உள்ளங்களை திருமணத்தில் இணைக்கும் கால்கட்டு!
உடலிலே உருவாகும் காளைகளால் காயங்கள்!
உயிரழப்பும் ஆகிவிடும் மயிரிழையின் தூரத்தில்
ஐந்திணை நிலங்களில் ஒன்றானது முல்லை!
ஆயர்குல மக்களிடம் இருந்தததிந்த வழமை!
மாமதுரை மீனாட்சி ஆளுகின்ற மதுரையிலும்
மகராணி வேலுநாச்சி ஆண்ட சிவகங்கையிலும்
மன்னன் விஜயரகுநாதன் ஆண்ட புதுக்கோட்டையிலும்
மலைக் கோட்டையைக் கொண்டிருக்கும் திருச்சியிலும்
சீர்மிகுத் தமிழர்களென்றால் வீறுகொள்ளுதல்!
சிறப்பினைக் கொண்டதிந்த ஏறு தழுவுதல்!
எழுதுவது :
கவிஞர் மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.