இந்து சமயமும் வழிபாட்டு முறைகளும்
சமையம் என்ற சொல்லுக்குச் சமைத்தல் அல்லது பக்குவப்படல் என்பது பொருள். ஒரு பெண், குழந்தை பெறுவதற்குப் பக்குவம் அடையும் தருணத்தையே சமைந்துவிட்டாள் என்கிறோம். காய், கீரை வகைகளைப் பல்வேறு பொருட்களுடன் இணைத்து உண்பதற்குப் பக்குவமான நிலையை அடையச் செய்வதையே சமைத்தல் என்கிறோம். அதாவது ஒரு பொருள் எதற்காகப் படைக்கப்பட்டதோ அதற்கான நிலையை அடைவதே சமைத்தல். இதைப்போலவே மனித உயிர்கள் பிறவாமையாகிய வீடுபேற்றை அடைவதற்கான நிலையை அடைவதே சமையம் எனப்படும். மனித வாழ்வை பக்குவப்படுத்துவதாகிய சமயம் என்று அழைக்கப்படுவது ஆன்மீகத்தில் கடவுளின் கொள்கையே ஆகும். அச்சமய உண்மைகளைத் தேர்ந்து, தெளிந்து ஒழுகுவதே கற்றதலாய பயனாகும். தொடக்கத்தில் சனாதன தர்மம் அல்லது என்றுமுள வாழ்க்கை நெறி என்றும், வேதங்களின் அடிப்படையில் அமைந்ததால் வைதீக சமயம் என்றும், மிகவும் தொன்மையான சமய நெறி என்பதால் புராதன சமயம் என்றும் பலவாறு பெயரிட்டு வந்தனர். பின்னாளில் மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டபோது பல்வேறு வகையான சமயங்கள் தோன்றின. இவ்வாறு சமயங்களில் பல்வேறு நிலைகள் காணப்பட்டாலும், இவை அனைத்தும் வழிகளாகவே அமைந்து, பல்வேறு வழிகளில் சென்றாலும் சேரும் இடம் விடுபேறு என்ற ஒரே இடமாகவே அமைந்தது என்பது கூர்ந்துநோக்கத்தக்கது.
இந்து சமயம்
இந்து என்ற சொல் சிந்து என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து ஈரானிய மொழியான பாரசிக மொழி மூலமாக உருவான ஒரு சொல்லாகும். இத்தகைய சொல்லைக் கொண்ட இந்து சமயம், இயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், நெருப்பு பொன்றவற்றைக் கண்டு பயந்த ஆதி மனிதன், அவற்றைக் கடவுளாகக் கொண்டு வழிபடத் தொடங்கினான் என்று ஆதி கால வழிபாட்டை விளக்குகின்றது. மேலும், சூரியன், சந்திரன், அக்னி, வருணன் போன்ற இயற்கையையே முதற் கடவுளாகவும், இவற்றை இயக்குகின்ற சக்தியே பரம்பொருள் என்றும் கருதிவந்தனர். பல்வேறு தேவர்களாலும் முன்னோர்களாலும் தொகுக்கப்பட்டதை வேதம் என்றும், இந்த வேதங்களின் உட்பொருளை எளிமையாக மக்களுக்குக் கூறுவதற்காக உபநிடதங்களையும், அதனினும் எளிமையாகக் கதை வடிவில் வேதம் மற்றும் உபநிடதங்களை விளக்குவதற்காகப் புராணங்களையும் தோற்றுவித்தனர். இதன் அடிப்படையில் வகுக்கப்பட்ட இந்து சமயம் சைவம், சாக்தம், வைணவம், கௌரம், காணபத்தியம், கௌமாரம் என்று ஆறு உட்பிரிவுகளைக் கொண்டது.
சைவம்
‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்று சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டுள்ளது இந்த சைவ மரபாகும். இது அனைத்துச் சமயங்களுக்கும் முந்தியதாகவும், அனைத்துச் சமயங்களையும் தன்னுள் அடக்கியதாகவும், அனைத்துச் சமயங்களையும் கடந்த ஒரு பரம்பொருள் கோட்பாடுடனும் விளங்குகிறது. இந்த சைவ சமயம், தன்னுடைய சாஸ்திரக் கட்டமைப்பாலும், சடங்கியற் சிறப்பாலும், தோத்திர மாட்சியாலும் வெளிநாட்டு சமய அறிஞர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருநீறும் உருத்திராக்கமுமே இவர்களின் குறியீடுகளாகும்.
சாக்தம்
சக்தியை வழிபாட்டுக் கடவுளாகக் கொண்டு வழிபட்டுவரும் சமயம் சாக்த சமயமாகும். சக்தி ஒன்றே உலக உயிர்கள் அனைத்திற்கும் தெய்வம். அவரையே தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டையுடையது இந்த சமயம். பயிர்கள் வேண்டியவுடன் வானம் மழையைப் பெய்வதுபோல் பக்தர்கள் வேண்டும்போதெல்லாம் அன்னையாக அருள்புரிபவர் சக்தி என்பது இவர்களுடைய நம்பிக்கை. இந்த சமயத்தவர்கள் தங்களைச் சக்திதாசர் என்று அழைத்துக் கொள்வார்கள். செவ்வாடை, குங்குமம் போன்றவற்றை இவர்கள் அணிவர்.
வைணவம்
இராமானுஜரால் விசிஷ்டாத்வைதம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு அதில் திருமாலை முழு முதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் வைணவமாகும். இச்சமய முழுமுதற் கடவுளான திருமாலைச் சிறப்பித்து பாடல்கள் பாடியவரை ஆழ்வார்கள் என்று அழைப்பர். இவர்கள் 108 தேசங்களிலுள்ள திருமாலைப் பற்றி 4000 பாடல்கள் பாடியுள்ளனர். ஆழ்வார்கள் என்றால், திருமாலினுடைய திருமண நிகழ்வில் ஆழ்ந்து, மகிழ்ந்து இருப்பவர்கள் என்று பொருள். உலகில் தீமைகள் ஓங்கும்போது வி~;ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவத்தின் நம்பிக்கை.
கெரளம்
சூரியக் கடவுளை முழு முதற்கடவுளாகக் கொண்டு வழிபட்டுவரும் சமயம் கௌரம் ஆகும். பேரெளி வடிவினனான சூரியக் கடவுளே உளகிற்கு ஒளி கொடுப்பவன். நம்மோடு, நம்முடைய இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கெடுத்தவர்கள் திடீரென இறந்தவுடன், அவர்கள் மேலோகத்திற்குச் சூரியனை சென்றடைகின்றனர், என்ற நம்பிக்கையில் முன்னோருக்கு மதிப்பளிக்கும் வகையில் சூரியக் கடவுளை வணங்குவதே விடுபேற்றிற்கான வழி என்று இம்மதத்தினர் கூறுவர்.
காணபத்தியம்
காணபத்தியம் என்பது விநாயகக் கடவுளை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயமாகும். கணபதி வழிபாட்டினை எவ்வளவு எளிமையாக வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். கோயில் கட்டி குடமுழுக்கு செய்துதான் கணபதி வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. சாப்பிடும் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துத் தட்டில் வைத்தாலும் அது பிள்ளையாராகத் தோன்றும். இந்த கணபதி வழிபாடானது கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் இடையில் இடையில் தோன்றியது.
கௌமாரம்
அழகுக் கடவுளான முருகக் கடவுளை முழு முதற் கடவுளாக ஏற்று வழிபடும் சமயமே கௌமார சமயமாகும். முருகு என்றால் அழகு என்று பொருள். எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தூய்மையும், அழகும் அமைய இவ்வழிபாட்டினை மேற்கொள்வர். இந்த கௌமார சமயம், பிரும்ம வித்தை, ஆத்ம வித்தை, புருசார்த்த சாதனம் என்ற மூன்று செல்வங்களையும் அடைய வழிகாட்டுகின்றது. “கௌ” என்றால் மயில் என்று பொருள். முருகன் மயில் வாகனன் என்பதால் இச்சமயம் கௌமாரம் என்று பெயர் பெற்றது.
வழிபாட்டு முறைகள்
நம்முடைய மனித மனம் உருவமுடைய பொருளை மட்டுமே எளிதில் பற்றிக்கொள்ளும் தன்மை வாய்ந்தது. எனவே ஓர் உருவமும் ஒரு நாமமும் இல்லாத இறைவனுக்கு நாம் பல உருவம், பல நாமம் கொடுத்து வழிபடுகின்றோம். இவ்வாறு ஓர் உருவத்தில் எழுந்தருளச் செய்து நிலைப்படுத்தப்பட்ட இறைவனை அவ்வுருவத்தினராகவே கருதி வழிபடுகின்றோம். இத்தகைய வழிபாட்டு முறைகள் பொதுவாக பதினாறு வகையைக் கொண்டது. அவை,
ஆசனம்
இறைவனுக்கு ஏற்ற தூய்மையான, மென்மையான இருக்கையை அளித்தல். இந்த இருக்கையானது சந்தன மரத்திலோ, தங்கத்திலோ, மலர்களாலோ அமைந்திருக்கும்படி தங்களுடைய வழிபாட்டினை அமைப்பர்.
பாத்யம்
இறைவனுடைய பாதங்களைத் தூய்மையான நிரீனைக் கொண்டு தூய்மை செய்தல். தூய்மை உள்ள இடத்தில்தான் இறைநிலை வீற்றிருக்கும் என்ற கொள்கையின்படி, இறைவனுடைய பாதங்களை நாம் தொட்டு வணங்கி இறைநிலையோடு இணைவதற்கு இது உதவும்.
ஆசமனம்
இறைவன் உட்கொள்வதற்கென்று நீரினை வலது கையினால் எடுத்து மூன்றுமுறை தருவது. பஞ்சபூதங்களாக இருக்கின்ற இறைநிலையை பஞ்ச பூதங்களின் மூலமே நம் வழிபாட்டிற்கு அழைக்கும் நிலையே இது.
அர்க்கியம்
மந்திரங்களை உச்சரித்து நீரை அமிழ்தமாகக் கருதி அளித்தல். உச்சரிக்கப்படும் மந்திரங்களைக் கேட்பதால், பக்தியின்போது ஏற்படும் கவனச்சிதைவு தடுக்கப்பட்டு மனம் இறைநிலையோடு இணையும்.
அபிஷேகம்
நறுமணப் பொருட்கள், எண்ணெய், மலர்கள், பால், இளநீர், தயிர், நெய், தேன், பழவகைகள், சந்தனம், ஆகியவற்றால் முழுக்காடுதல்.
அலங்காரம்
அழகிய ஆடைகள், மலர்கள், அணிகலன்கள் கொண்டு ஏற்கனவே அழகாக உள்ள இறைவனை மேலும் அலங்கரித்தல்.
கந்தம்
இறைவனுடைய திருமேனிக்குச் சந்தனம் பூசுதல்.
புஷ்பம்
நறுமண மலர்களைத் தூவி வழிபடுதல்.
தூப தீபம்
நறும்புகைகள், பலவகையான விளக்கொளிகள் மற்றும் கற்பூர ஒளிகளை இறைவன் முன் காட்டுதல். எண்ணை, திரி, கற்பூரம் போன்ற பொருட்கள் அதனைப் பற்றவைப்பதற்கு முன் உருவமாக இருந்து, பிறகு அதனைப் பற்றவைத்ததுடன் அரு உருவமாக மாறி, அவை எரிந்து முடிந்ததும் அருவமாக மாறுவது போன்றதே நம் வாழ்க்கையும் என்பதை விளக்குவதற்கே இவ்வழ்பாட்டு முறை மேற்கொள்ளப்படுகின்றது.
நைவேத்தியம்
இறைவனுக்குத் தூய்மையான முறையில் தயாரித்த உணவினைப் படைத்தல். நாம் உண்ணும் உணவே நம்முடைய எண்ணங்களைத் தீர்மாணிக்கின்றன. நம் எண்ணங்களே நம் செயல்களைத் தீர்மாணிக்கின்றன. நம் செயல்களே நம்மை இந்த உலகிற்கு அறிமுகம் செய்துவைக்கின்றது. எனவே நாம் உண்ணும் உணவே நம்முடைய அனைத்திற்கும் காரணமாக அமைகின்றது என்பதால், அந்த உணவு இறைவனுக்கு படைக்கப்பட்ட உணவாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வழிபாட்டு முறை மேற்கொள்ளப்படுகின்றது.
தாம்பூலம்
இறைவனுக்கு வெற்றிலைப்பாக்கு அளித்தல்.
தர்ப்பணம்
இறைவனின் அழகைக் கண்ணாடியில் காட்டுதல்.
சத்ரம்
இறைவனுக்குக் குடை பிடித்தல்.
சாமரம்
இறைவனுக்கு விசிறி வீசுதல்.
ஆசனம்
கீதம், நாட்டியம், இசைவு நடத்தி இறைவனை மகிழ்வித்தல்.
வாத்யம்
நாதஸ்வரம் போன்ற மங்கல இசைக் கருவிகளை இசைத்தல்.
இத்தகைய வழிபாட்டு முறைகளில், மேலே கூறியதுபோல் ஆறு வகையாகப் பகுக்கப்பட்ட இந்து சமயத்தினர் தங்களுடைய வழிபாட்டுமுறைகளை அமைத்துக்கொள்வார்களானால், தங்களுடைய பிறவிப்பினியை நீக்கி இறைநிலையோடு இணைந்து இன்புற்றிருப்பர் என்பதில் துளியும் ஐயமில்லை.
எழுதுவது : முனைவர் ப. கற்பகராமன்
MA.,MA.,MA.,M.Phil.,P.hD., உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை
சோனாகலைமற்றும் அறிவியல் கல்லூரி,
சேலம்- 05