புதனன்று பாவனைக்கு வரவிருக்கும் 5 G சேவை பல்லாயிரக்கணக்கான விமானங்களை செயற்பாடு இழக்கச் செய்யுமா?
AT&T and Verizon ஆகிய நிறுவனங்கள் புதனன்று தமது நவீன தொழில் நுட்பத்திலான தொலைத்தொடர்புச் சேவை 5 G ஐ பாவனைக்குக் கொண்டுவரவிருப்பதாக அறிவித்திருக்கின்றன. அந்தச் சேவை உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான விமானங்களைச் செயலிழக்கச் செய்து, சரக்கு விமானங்களை நிறுத்துவதுடன், லட்சக்கணக்கான பயணிகளுக்கு இடைஞ்சலை விளைவிக்கும் என்று பல அமெரிக்க விமான நிறுவன உயரதிகாரிகள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யுனைட்டெட் ஏர்லைன்ஸ், சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் உயரதிகாரிகள் இந்த அச்சத்தைத் தமது பத்திரிகை அறிக்கையொன்றின் மூலம் வெளியிட்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் மத்திய விமானசேவைத் திணைக்களம் தனது எச்சரிக்கையில் நவீன 5 G சேவைத் தொடர்புகள் விமானங்களின் நுண்ணிய பாகங்களின் இயக்கங்கள் சிலவற்றைச் செயற்படாமல் செய்துவிடலாம் என்று சுட்டிக் காட்டியிருக்கிறது.
விமான நிறுவனங்களும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தாம் சில தடைகளை விமான சேவைகளில் எதிர்ப்பார்க்கக்கூடும் என்று குறிப்பிட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன. சில பகுதிகளில் புதிய தொலைத்தொடர்புச் சேவை 30 நாட்கள் தள்ளிப் போடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
5 G தொழில் நுட்பம் ஏற்கனவே சுமார் 40 நாடுகளில் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டு விமானப் போக்குவரத்துக்கு எந்தவித இடைஞ்சலுமில்லாமல் அவை இயங்கி வருவதாகவும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்