தோற்றுப்போகும் அண்டிபயோட்டிகா மருந்துகளால் 2019 இல் இறந்தோர் மில்லியனுக்கும் அதிகமானது.

அண்டிபயோட்டிகா மருந்துகளை உலகளவில் அளவுக்கதிகமாகப் பாவித்து வருவதால் அம்மருந்துகளுக்குப் பல கிருமிகள் பழகிவிட்டன. அதனால், பல வியாதிகளுக்கு எதிராக அவை பாவிக்கப்படும்போது பலனின்றிப் போவது பற்றி நீண்ட காலமாகவே மருத்துவ உலகம் எச்சரித்து வந்தது. அவ்வெச்சரிக்கைகள் பல நாடுகளில் அலட்சியப்படுத்தப்பட்டு வருவதன் விளைவாக முதல் தடவையாக அண்டிபயோட்டிகா பாவனை தோற்றுப்போனதால் நேரடியாக இறந்தோர் எண்ணிக்கை 2019 இல் ஒரு மில்லியனைத் தாண்டியிருப்பதாக லான்செட் சஞ்சிகையில் வெளிவந்திருக்கும் ஆராய்ச்சியொன்று சுட்டிக் காட்டுகிறது.

https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(21)02724-0/fulltext

இறப்பவர்களில் பலர், இரத்தம் நச்சுப்படல், குடல் நோய், சுவாசப்பை சம்பந்தமான நோய்கள் ஆகியவற்றுக்காக அண்டிபயோட்டிக்கா மருந்துகள் செயற்படாமல் போவதால் இறக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகள். இறப்புக்களில் பெரும்பாலானவை வறிய நாடுகளிலேயே நடக்கின்றன. ஆனால், அவை உலகின் பல நாடுகளிலும் அதிகரித்து வருகின்றன.

தொடர்ந்தும் வெற்றிகரமாக இருக்கும் அண்டிபயோட்டிக்கா மருந்துகளையும், அவை பாவிக்கப்படும் வியாதிகளையும் உலக நாடுகளின் அரசுகள் இனிமேல் எப்படிக் கையாள்வதென்று ஒன்றிணைந்து திட்டமிடவேண்டும் என்று மருத்துவ உலகிலிருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது. இல்லாவிடில், மேலும் அதிக நோய்களுக்கு அண்டிபயோட்டிக்கா மருந்துகள் செயலிழக்கும் ஆபத்து இருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்