மேஷ ராசியில் பிறந்தவரா நீங்கள்? பொதுவான அம்சங்களை மறக்காமல் பாருங்கள்
அசுவினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கும், ராசி எதுவென்று தெரியாத சித்திரை மாதத்தில் பிறந்தவர்களுக்கும், சு, செ, சோ, லா, லி, லூ, லே, லோ, அ.. ஆகியவற்றை தங்கள் பெயரில் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.
ராசியின் அதிபதி: செவ்வாய், நட்சத்திர அதிபதிகள்: கேது, சுக்கிரன், சூரியன். பாதகாதிபதி: சனி, மாரகாதிபதி: சுக்கிரன்.
எந்த நிலையிலும் தைரியம் குறையாத மேஷ ராசி நண்பர்களே! உங்கள் வாழ்க்கையில் நல்லது கெட்டது இரண்டையுமே சரிசமமாகப் பார்த்து வரும் நீங்கள் மற்றவர்களுக்காக உழைப்பதிலும், உரிமைக்காகப் போராடுவதிலும் எப்போதும் முதல் இடத்தில் இருப்பீர்கள்.
கடந்த காலத்தை நீங்கள் படிப்பினையாக எண்ணக் கூடியவர்கள், உங்களிடம் நிகழ் காலத்தைவிட எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள்தான் மேலோங்கி இருக்கும். எப்போதும் அது பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் மிகவும் பிடிவாதக்காரர் மட்டுமல்ல நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று நினைத்திடக் கூடியவர், உங்கள் வழியில் யார் குறுக்கிட்டாலும் அவர்கள் மீது ஆவேசம் கொள்வீர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் படைத்தவர் நீங்கள்.
உங்கள் ராசிக்கு அதிபதியான செவ்வாய் சத்திரிய கிரகம் என்பதால், எந்த ஒன்றையும் போராடி வென்றிடக் கூடியவராக நீங்கள் இருப்பீர்கள். அரசியலில் உங்களுக்கு உயர்வு கிட்டும், ராஜ கிரகமான சூரியன் உங்கள் ராசியில் உச்சம் பெறுவதால் பிரகாசமான எதிர்காலம் உங்களுக்கு உண்டு.
மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்று பேசத்தெரியாத உங்களுக்கு அதுவே பலமும் பலவீனமும் ஆகும், ரகசியங்களைப் பாதுகாப்பதில் வல்லவரான உங்களுக்கு பலதரப்பட்டவர்களின் நட்பு கிட்டுவதுடன் அவர்களால் ஆதாயமும் அடைவீர்கள். உங்கள் ராசிநாதன் பூமி காரகன் என்பதால் இடத்தாலும் பூமியாலும் உங்களுக்கு எப்போதும் லாபம் உண்டு, உங்களுக்கென்று ஒருபிடி மண்ணாவது சொந்தமாக இருக்கும். பூமிக்கும், சகோதரருக்கும், காவல்துறைக்கும், ராணுவத்திற்கும் ஆதிக்கம் பெற்ற செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் சிறந்த லட்சியவாதியாக இருப்பீர்கள், உங்களை ஒரு சிலர் சுயநலக்காரர், காரியவாதி என்று கூட விமர்சனம் செய்வார்கள், ஆனால், அதையெல்லாம் நீங்கள் காதில் வாங்கிக்கொள்ள மாட்டீர்கள்.
எந்த ஒரு செயலில் இறங்கினாலும் அதில் வெற்றிபெற வேண்டும் என்பது மட்டுமே உங்கள் நோக்கமாக இருக்கும், அதற்குரிய எல்லா வகையான செயல்களிலும் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்வீர்கள், காரணம், உங்கள் ராசிநாதன் செவ்வாய் செயல் வேகம் மிகுந்தவர் என்பதால் அவருடைய ஆற்றல் உங்கள் செயல்களில் பிரகாசிக்கும், ஒரு செயல் என்று வரும்போது உங்களுக்கு ஈடு என்றால் அது நீங்கள் மட்டுமாகத்தான் இருப்பீர்கள், அந்த அளவிற்கு ஒவ்வொரு செயலிலும் வேகம் நிறைந்தவர்கள் நீங்கள்.
உங்கள் ராசிநாதன் அக்னிக்காரகன் என்பதால் எந்த ஒரு காரியத்திலும் துணிச்சலாக இறங்குவீர்கள், பக்கத்துணை இல்லாமல் நீங்களே எந்த ஒன்றையும் சாதிக்க நினைப்பீர்கள், அதற்குரிய வேகமும், விவேகமும், ஆற்றலும் உங்களிடம் இருக்கும். வெளித்தோற்றத்திற்கு நீங்கள் கரடு முரடானவர்போல் தோன்றினாலும் உங்களை நெருங்கி வருபவர்களுக்கு உதவி செய்வதும் அவர்களைப் பாதுகாப்பதுமே உங்கள் நோக்கமாக இருக்கும்.
நினைத்ததை, எண்ணுவதை செயலாக்கத் தூண்டும் கிரகம் உங்கள் ராசிநாதனான செவ்வாய் என்பதால் எதையும் எதிர்ப்பார்த்து, காலம் வரட்டும் என்று காத்திருக்க மாட்டீர்கள், நினைத்ததை உடனே சாதித்துவிட வேண்டும் என்று செயல்படவும் ஆரம்பித்து விடுவீர்கள், உங்கள் செயலுக்கு யார் எதிரில் வந்தாலும் அவரை எப்படி வீழ்த்துவது என்பதை நீங்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பீர்கள்.
காலபுருஷ தத்துவத்தின்படி முதல்ராசியான மேஷ ராசியில் நீங்கள் பிறந்தவர் என்பதால் எந்த இடத்திலும் முதன்மையானவராகவே நீங்கள் இருப்பீர்கள். உங்களை வீழ்த்த நினைப்போர் வீழ்ந்து போவார்களே தவிர உங்கள் வெற்றியையோ புகழையோ யாராலும் தடுத்துவிட முடியாது. கௌரவம், செல்வாக்கு என்று அனைத்திலும் நீங்கள் உயர்ந்து நிற்பீர்கள்.
எப்போதும் தலைமை வகிப்பதிலும், எதிரிகளை அழிப்பதிலும் ஆற்றல் பெற்றவர்கள் உங்கள் ராசியினர் மட்டுமே, உங்கள் மனம் இளகி, போனால் போகட்டும் பாவம் என்று நீங்கள் நினைத்து அமைதியானால் மட்டுமே எதிரிகளின் தலை தப்பும், அந்த அளவிற்கு ஆற்றலும் சூட்சுமமும் மிக்கவர் நீங்கள், மனித உடலில் தலைக்கும், முகத்திற்கும் உங்கள் ராசியே காரகமாகிறது என்பதால் உங்களுக்கு சுய அறிவும், சொந்த மூளையும், முகத்தைக் கவர்ச்சியாக வைத்துக் கொள்ளும் திறமையும் அதிகமாக இருக்கும், உங்களால் புதியப்புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள முடியும், அதன் மூலம் புதியனவற்றை உங்களால் தோற்றுவிக்கவும் முடியும் என்றாலும் சில நேரத்தில் ஆத்திரத்தாலும், படபடப்பாலும் உணர்ச்சி வேகத்தாலும் உங்கள் முயற்சிக்குரிய வெற்றிகளை உங்களால் எட்ட முடியாமல் போய்விடும்.
இவையெல்லாம் மேஷ ராசியில் பிறந்த உங்களுடைய பொதுப்பலன்களில் சிலவாகும்.
எந்த ராசியில் பிறந்தாலும், லக்கினம், கிரக அமைப்புகள், தசாபுத்தி போன்றவற்றுக்கு ஏற்பவும், கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்பவும், அந்த கிரகங்கள் உங்களுடைய ஜாதகத்தில் அமர்ந்திருந்த நிலைக்கேற்பவும் உங்களுக்குப் பலன்கள் மாறுபடும்.
எழுதுவது : சோதிட வித்தகர் பரணிதரன்