கவர்ச்சியென்பது உங்களுக்கு கூட வரும்!|ரிஷப ராசிக்காரின் பொதுப்பலன்கள்

கிருத்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும், ஜென்ம ராசி எதுவென்று தெரியாத வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கும், இ, ஊ, ஏ, ஒ, வ, வி, வூ, வே, வோ.. ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.

ராசியின் அதிபதி: சுக்கிரன். நட்சத்திர அதிபதிகள்: சூரியன், சந்திரன், செவ்வாய். யோகாதிபதிகள்: சனி, புதன், சுக்கிரன். மாரகாதிபதி: சுக்கிரன்.


கலைக்காரகன், களத்திரக்காரகன் என்னும் சுக்கிர பகவானின் ஆதிக்கத்தில் பிறந்து, கவர்ச்சியாலும், திறமையாலும், இனிமையாகப் பழகுவதாலும் எல்லோரிடமும் நெருக்கம் கொள்ளும் ஆற்றல் பெற்ற ரிஷப ராசி நண்பர்களே!

ஒவ்வொரு சொல்லையும் எப்படி உபயோகிக்க வேண்டும், கேட்டுக் கொண்டிருப்பவர் எப்படிப்பட்டவர், அவரின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை அறியும் சக்தியும் அதற்கு ஏற்றார்போல் அவரிடம் பேசி அவர் மனதில் நன்மதிப்பைப் பெறும் ஆற்றலும் உங்களுக்கு இயல்பானதாகும், உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்று வந்து விட்டால் அதை எதிர்த்துப் போராடுவதில் முதல் ஆளாக நீங்கள்தான் இருப்பீர்கள், மாற்றங்களை எப்போதும் விரும்பும் உங்களால் பொது வாழ்விலும் புகழ்க் கண்டிட முடியும், புகழ்ப்பெற்ற கலைஞர்கள் பலர் உங்கள் ராசியில் பிறந்தவர்கள் தான், உங்கள் ராசிக்கு அதிபதி களத்திரக்காரகன் என்பதால் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும்போது பொருத்தம் பார்த்து தேர்ந்தெடுத்தால் வெற்றிமேல் வெற்றிதான்.

ஒரு பொறுப்பை உங்களிடம் கொடுத்தால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முடித்து விடும் ஆற்றல் உங்களுக்கு உண்டு, இதன் காரணமாகவே உங்களிடம் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளை ஒப்படைப்பதில் ஆர்வம் காட்டுவார்கள், உங்கள் ராசியில்தான் மனக்காரகன் என்னும் சந்திரன் உச்சம் பெறுகிறார், சிந்தனைக்கு முக்கியத்துவம் பெறும் சந்திரன் உச்சம் பெறும் ராசியாக உங்கள் ராசி இருப்பதால் உங்கள் யோசனைகளைக் கேட்டு நடப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்றே சொல்லலாம், மனைவி, வாகனம், வளம் இவற்றுக்கெல்லாம் அதிபதியும் ஆதிக்கவானுமாகிய சுக்கிரனின் அம்சத்தில் பிறந்தவர்கள் நீங்கள், மற்றவர்களால் நீங்கள் அடைந்ததைவிட உங்கள் முயற்சியால், உங்கள் உழைப்பால் நீங்கள் அடைந்ததே எல்லாமுமாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கை என்பதும் உங்கள் அறிவாற்றலைக் கொண்டதாகவே இருக்கும். ஒவ்வொன்றையும் நீங்களே தெரிந்து கொண்டு உங்கள் செயல் திறனால் அதில் வெற்றிபெற்று உங்களுக்குத் தேவையானவற்றை நீங்கள் அடைந்து விடுவீர்கள். எந்த விஷயத்திலும் எப்போதும் அவசரம் காட்ட மாட்டீர்கள், எதற்காகவும் ஆத்திரப்படவும் மாட்டீர்கள், எந்த ஒரு செயலில் ஈடுபடுவது என்றாலும் ஒரு முறைக்கு பலமுறை நன்றாக யோசித்து அதன் பிறகே செயலில் இறங்குவீர்கள், உங்களுக்கு இயல்பாகவே மன ஆற்றலும், மன உறுதியும், நெஞ்சழுத்தமும் இருக்கும், கஷ்டத்தையும் பொருட்படுத்த மாட்டீர்கள், சுகத்தையும் பெரிதுபடுத்திக் கொள்ள மாட்டீர்கள், இரண்டையும் சமமாகவே கருதும் மனநிலைப் பெற்றவர் நீங்கள்.

நீங்கள் ஈடுபடும் வேலை எதுவாக இருப்பினும் அதில் முழுமையாக உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள், உணவு, தூக்கம் என்பது கூட உங்களுக்கு இரண்டாம் பட்சமாகவே இருக்கும், நீங்கள் உச்சத்தில் இருந்தாலும் ஒரு தொழிலாளியைப் போலவே வேலை செய்வீர்கள். ஆனால், எப்போதும் உங்களுக்கு ஒரு தூண்டுகோல் தேவையாக இருக்கும். சிலவற்றை உங்கள் போட்டியாளர்கள் செய்யும்போது அப்போதே செய்யாமல் போனோமே என்று வருந்துவீர்கள். நீங்கள் ஆலோசித்து அடையும் வெற்றியை விட உழைத்து அடையும் வெற்றியே பெரிதாக இருக்கும்.

பொதுவாக சிலவற்றை நீங்கள் அலட்சியம் செய்யக்கூடியவர்களாக இருப்பீர்கள், எப்போதுமல யாராவது ஒருவர் தூண்டுகோலாக இருந்து உங்களைத் தூண்டிக் கொண்டிருந்தால் நீங்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றத்தை அடைவீர்கள், பெரும்பாலும் உங்கள் மனதை வீணான வழிகளில் செலுத்தமாட்டீர் கள், உங்களை எவராலும் அவர்களுடைய வழிக்குத் திருப்பி விடவும் முடியாது, திடீர் யோகத்தைவிடவும் படிப்படியாக முன்னேற்றம் காணும் நீங்கள் சாதாரண பொருட்கள் மீது அதிக ஆசை வைக்க மாட்டீர்கள், அற்ப விஷயங்களுக்கு அடிமையாக மாட்டீர்கள், உங்கள் வாழ்க்கை நிலை எவ்வளவுதான் கீழ்மட்டத்தில் இருந்தாலும் ஆடம்பரமான, விலை உயர்ந்த மதிப்புடைய பொருட்களே நீங்கள் உபயோகப்படுத்தும் பொருட்களாக இருக்கும்.

உங்களுக்கு இயல்பாகவே போதிய வசதிகள் அமைந்திருக்கும், அமையாவிட்டாலும் அமைந்தே தீரும், பிறர் நம்பும் வகையில் உங்கள் செயல்பாடுகள் இருக்கும், உங்கள் தகுதியை எப்போதும் எல்லா இடத்திலும் நிலை நிறுத்த முயல்வீர்கள், உங்கள் நலன், உங்கள் குடும்ப நலன் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள், அதை பெரிதும் உயர்த்துவதற்காகவே உழைப்பீர்கள்.

மனித உடலில் உங்கள் ராசி குரல்வளைக்கு சம்பந்தப்பட்டது. எனவே, நீங்கள் செயல்புரியும் அளவிற்கு அதிகமாகப் பேச மாட்டீர்கள், எந்த ஒன்றாக இருந்தாலும் அதை முழுமையாக அடைந்தால் மட்டுமே உங்கள் மனம் நிறைவடையும் என்றாலும் அதை விடவும் உயர்ந்ததாக ஒன்று உங்களுக்கு தென்பட்டால் அதன் மீது உங்கள் மனம் மையல் கொள்ளும், கடைசியில் கண்டதிலும் கால் வைத்துவிட்டு வேதனையை அனுபவிக்கும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படவும் வாய்ப்புண்டு என்பதால் எந்த ஒன்றையும் அடைய நினைக்கும் போதே ஒரு முறைக்குப் பலமுறை நீங்கள் யோசிப்பது நல்லது.

சரியாக திட்டங்கள் தீட்டி அதை சீர்படுத்தி அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி பெறக்கூடியவர்கள் நீங்கள், உங்களிடம் போட்டியிடுபவர்களை எப்படியாவது வீழ்த்தி விடுவீர்கள், உங்களுக்குப் பிடிக்காதவரை அவர் வழியிலேயே சென்று வீழ்த்துவதில் நீங்கள் திறமை மிக்கவராக இருப்பீர்கள்.

இவையெல்லாம் ரிஷப ராசியில் பிறந்த உங்களுடைய பொதுப்பலன்களில் சிலவாகும்.

எந்த ராசியில் பிறந்தாலும், லக்கினம், கிரக அமைப்புகள், தசாபுத்தி போன்றவற்றுக்கு ஏற்பவும், கிரகங்களின் கோட்சாரத்திற்கு ஏற்பவும், அந்த கிரகங்கள் உங்களுடைய ஜாதகத்தில் அமர்ந்திருந்த நிலைக்கேற்பவும் உங்களுக்குப் பலன்கள் மாறுபடும்.

எழுதுவது : சோதிடவித்தகர் பரணிதரன்