சர்வதேச அளவில் பெயரை மாறிக்கொள்ளப்போகிறது துருக்கி.
துருக்கிய அரசு தற்போது உலகளவில் பொதுவாகப் பாவிக்கப்படும் Turkey என்ற பெயரை Türkiye என்று மாற்றிக்கொள்ளப்போவதாக ஐ.நா-வில் அறிவிக்கவிருக்கிறது. துருக்கிய மொழியில் துருக்கி என்பதை அச்சொல் குறிக்கும். அந்த மாற்றம் எப்போது செய்யப்படும் என்பது பற்றித் துருக்கிய அரசு இன்னும் தெளிவான முடிவை எடுக்கவில்லை.
துருக்கியின் ஜனாதிபதி எர்டகான் டிசம்பர் மாதம் தனது நாட்டு மக்களிடம் மேற்கண்ட மாற்றத்தைத் தமது வழக்கங்களில் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ஏற்றுமதிப் பொருட்களுடைய விபரங்களிலும் மாற்றத்தைப் பயன்படுத்தும்படி அவர் நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டார். அரச செய்தி நிறுவனங்கள் உடனடியாக அந்த மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கின்றன.
சர்வதேச ரீதியில் அந்த மாற்றம் ஒரு சிக்கலைக் கொடுக்கும் என்பதாலேயே அதை உலகளவில் எப்படி, எப்போ அறிமுகப்படுத்துவது என்று சிந்திக்கப்படுகிறது. காரணம் “Ü” என்ற எழுத்து துருக்கிய எழுத்தாகும். உலக நாடுகளின் பெயர்களில் லத்தீன் மொழி எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கிரேக்க மொழியில் கிரீஸ் Hellas, சுவிஸ் தன்னை Helvetica என்றும், ஆர்மீனியா தனது மொழியில் Hayastan என்றும், கிரவேசியா தன் மொழியில் Hrvatska என்றும் அழைக்கப்படுகின்றன. செக் ரிபப்ளிக் 2016 இல் தனது சர்வதேசப் பெயரை Czechia என்று மாற்றிக்கொண்டது.
சாள்ஸ் ஜெ. போமன்