தனது ஆறு வயது மகளை 29 வயதுக்காரனுக்கு திருமணம் செய்துவைத்த துருக்கிய இஸ்லாமிய அமைப்பின் முக்கியத்துவர்.

துருக்கியில் சமீப வாரங்களில் முக்கிய பேசுபொருளாகிச் சமூகத்தையே கலக்கியிருக்கிறது 6 வயதில் திருமணமேடைக்குத் தனது பெற்றோரால் அனுப்பப்பட்ட ஒரு பெண்ணின் கதை. அப்பெண்ணின் தந்தை நாட்டின் முக்கிய இஸ்லாமிய இயக்கமான இஸ்மாயிலாகாவின் கிளையொன்றின் நிறுவனராகும்.   யூசுப் ஸியா[Yusuf Ziya Gümüşel] என்ற பெயருடைய அவரது குடும்பம் பெண்களுக்குக் கல்வி ஆகாது என்று நம்புபவர்களாகும்.

தற்போது 24 வயதாகிவிட்ட அந்தச் சிறுமி H.K.G என்று மட்டுமே விபரங்களை வெளியிட்ட பத்திரிகையாளர்களால் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறார். தான்  6 வயதாக இருக்கும்போது  கல்யாண உடையுடுத்திக் கையில் ஒரு விளையாட்டுப் பொருளுடன் 29 வயதுக்காரன் ஒருவனுக்கு மணமகளாக்கப்பட்டு அதற்கடுத்த நாளே பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக அப்பெண் விபரங்களை வெளியிட்டிருக்கிறார்.

தொடர்ந்தும் வன்புணர்வு, துஷ்பிரயோகம், வன்முறை ஆகியவைக்கு அப்பெண் தினசரி ஆளாக்கப்பட்டார். அதை எதிர்க்கலாகாது என்றும் அப்படிச் செய்தால் தேவதைகளால் கைவிடப்பட்டுவிடுவார் என்றும் பெற்றோர் மிரட்டியிருந்தனர். 17 வயதில் அப்பெண்ணுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதைப் பெற்றோர் பறித்தெடுத்து விட்டனர். வானொலி நிகழ்ச்சியொன்றின் மூலம் பாலர் திருமணம் சட்டவிரோதமானது என்பதை அறிந்துகொண்ட H.K.G அதன் பின்னர் தனக்கு நடந்தவை, நடந்து வருபவை எல்லாம் தவறானவை என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தாள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது குடும்பத்திலிருந்து தப்பித்து வேறு நகரத்திற்குச் சென்று ஒரு தங்குமிடத்தில் வசித்து வருகிறார்.  தனது படிப்பை முடிக்க முயற்சிக்கிறார். அவள் நவம்பர் 30, 2020 அன்று வழக்குரைஞர் அலுவலகத்திற்குச் சென்று தான் ஒரு  ஒரு குழந்தை மணமகளாக இருந்ததையும், துஷ்பிரயோகம், வன்புணர்வு போன்றவற்றுக்கு ஆளாக்கப்பட்டதையும் குறிப்பிட்டுப் புகார் கொடுத்தார். புகைப்படங்கள் மற்றும் அவரது கணவருடன் தனது கதையைப் பற்றி பேசும் ரகசிய ஆடியோ பதிவையும் வழக்கறிஞரிடம் கையளித்தார். 

H.K.G இன் கதை வெளியாக ஆரம்பித்ததும் அவரது பெற்றோர் தம் மகளுக்கு மூளைக்கோளாறு என்றும் அவள் சொல்வதெல்லாம் பொய் என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள். பெற்றோர்கள் கைதுசெய்யப்படவில்லை. ஆனால், H.K.G இன் கதையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த பத்திரிகையாளர்கள் மீது வசை பாட ஒரு கும்பல் ஆரம்பித்திருகிறது. அவர்கள் குறிப்பிட்ட பத்திரிகையாளர்களை நீதியின் முன் நிறுத்தித் தண்டிக்கவேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

இஸ்மாயிலாகா அமைப்பு தனது இணையத்தளத்தில் குழந்தைகள் திருமண விவாதங்கள், விசாரணைகள் போன்றவைக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்று அறிக்கை விட்டிருக்கிறது. பெண்ணின் தந்தையான் யூசுப் ஸியா பற்றித் தமது தளத்திலிருந்து விபரங்களை அகற்றிவிட்டிருக்கிறது.

வயதுக்கு வராதவர்களைத் திருமணம் செய்து கொடுத்தல் துருக்கியில் பரவலாக நடந்து வருகிறது. 18 – 45 வயதுள்ள பெண்களில் ஐந்தில் ஒருவரின் திருமணம் சிறுவயதிலேயே நடந்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. நடக்கும் சுமார் 17 விகிதமான திருமணங்களில் திருமணம் செய்துகொள்பவர்களில் ஒருவர் குழந்தை வயதுள்ளவராகவே இருக்கிறார்.

சாள்ஸ் ஜெ.போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *