அடுத்த வாரம் முதல் முழுசாகவும், பாதியளவும் சுதந்திரமடையப் போகும் டென்மார்க், நெதர்லாந்து மக்கள்!
டென்மார்க்கில் மீதியாக இருக்கும் சில கொரோனாத்தொற்றுக் கட்டுப்பாடுகளையும் இம்மாத இறுதியில் நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பாவிலேயே மிகக் கடுமையான முடக்கத்தை டிசம்பர் மாதத்தில் அறிவித்திருந்த நெதர்லாந்து தனது ஒரு பகுதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தவிருக்கிறது.
5 – 11 வயதினருக்கு உட்பட நாட்டின் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு டென்மார்க் கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொடுத்திருக்கிறது. கொவிட் 19 சமுகத்தில் பரவுவது தொடர்ந்தாலும் கூட மருத்துவ சேவைக்கு இடைஞ்சல் கொடுக்கக் கூடிய அளவில் அது இல்லை. அத்துடன் அக்கொடும் நோயால் இறப்பவர்கள் மிகச் சிலரே. எனவே பெப்ரவரி முதலாம் வார இறுதிமுதல் கொவிட் 19 சமூகத்துக்கு மோசமான விளைவுகளைக் கொடுக்கும் நோய் என்ற பட்டியலிலிருந்து நீக்கப்படும்.
பொதுமுடக்கத்திலிருக்கும் நெதர்லாந்து தனது கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்தப்போவதாக அறிவித்திருக்கிறது. நாட்டின் கொரோனாத் தொற்று எண்ணிக்கை தொடர்ந்தும் மிக அதிகமாகவே இருக்கும் நிலையிலும் நெதர்லாந்து இந்த முடிவை எடுத்திருக்கிறது. அடுத்த வாரம் முதல் நாட்டின் உணவுச்சாலைகள், தவறணைகள், அருங்காட்சியகங்கள் ஆகியவையைத் திறக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
சுவீடனிலும் ஒமெக்ரோன் திரிபின் அதிவேகமான பரவல் காரணமாக கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் சேவை நாடுபவர்கள் தொகை ஓரளவு அதிகரித்திருக்கிறது. வாராவாரம் தொற்றியவர்களின் எண்ணிக்கை 500,000 என்று கணிக்கப்படுகிறது.
இறப்புக்கள் அதிகமாக இல்லாவிடினும் தொற்றியவர்கள், நோய் அடையாளமுள்ளவர்கள் தமது வேலையிடங்களுக்கோ, பாடசாலைகளுக்கோ போகவேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால், நாட்டின் சமூக சேவை திணைக்களங்கள், பாடசாலைகள் போன்றவை இயங்குவது கடினமாகியிருக்கிறது. பல ஊழியர்கள் ஓய்விலிருக்கிறார்கள்.
எனவே, டென்மார்க் போலன்றி சுவீடனில் ஏற்கனவே இருக்கும் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் இரண்டு வாரங்களுக்குத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணம் சமூகத் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்து நாட்டின் அவசியமான துறைகளின் சேவைகளில் இடையூறு ஏற்படாமலிருக்கவே என்று தொற்று நோய்த் தடுப்புத் திணைக்களம் தெரிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்