காலிபாத் தீவிரவாதிகள் வீழ்த்தப்பட்டு அவர்கள் கைவசமிருந்த சிறையை மீட்டெடுத்தார்கள் குர்தீஷ் படையினர்.
சுமார் ஒரு வாரமாக இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான ஐ.எஸ் உடன் போராடி அவர்களின் கை ஓங்கியிருந்த அல்-சினா சிறைச்சாலையைக் குர்தீஷ் படையினர் கைப்பற்றியதாக புதனன்று அறிவிக்கப்பட்டது. குர்தீஷ் படையினருக்கு அமெரிக்க இராணுவ உதவியும் வழங்கப்பட்டது. சிரியாவின் வடகிழக்கிலிருக்கும் ஹசாகா நகரில் சிறைவைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள் அங்கிருந்த குழந்தைகளைக் கேடயமாக வைத்து அதைக் கைப்பற்றியிருந்தனர்.
இரண்டு மனிதக் குண்டுகளைப் பாவித்துச் சிறையிலிருக்கும் தமது சக தீவிரவாதிகளை வெளியே எடுப்பதற்காக ஐ.எஸ் இயக்கத்தினர் சிறையத் தாக்கினர். உள்ளேயிருந்தவர்களும் சிறைக்கு தீமூட்டினார்கள். அதனால் அச்சிறையின் கட்டுப்பாட்டை அப்பகுதியில் ஆட்சியிலிருக்கும் குர்தீஷ் அரசு இழந்தது.
அந்தச் சிறையில் ஏற்பட்ட நிலைமையைப் பல மனிதாபிமான அமைப்புக்கள் கடுமையாக விமர்சிக்கின்றன. சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த 40,000 க்கும் அதிகமான பாலர்கள் ஐ.எஸ் இயக்கத்தின் வீழ்ச்சியின் பின்னர் சிரியாவின் வெவ்வேறு சிறைகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதிக பொருளாதார வசதியில்லாத குர்தீஷ் நிர்வாகம் அப்பாலர்களை வயதுக்கு வந்த தீவிரவாதிகளுடனேயே சிறைகளில் வைத்திருக்கிறது. அதன் விளைவு பாலர்களும் தீவிரவாதிகளாகவே வளர்க்கப்படுவார்கள் என்று விமர்சிக்கப்பட்டது.
நடந்த சிறையுடைப்புப் போரில் பாலர்களை அங்கே போரிட்ட தீவிரவாதிகள் தமது மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சுமார் ஒரு வாரமாக உணவோ, நீரோ இன்றி வருத்தப்பட்ட அவர்களின் நிலைமை பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
வசதியான நாடுகள் பலவும் சிரியாவின் சிறைகளில் இருக்கும் தமது குடிமக்களையோ, பாலர்களையோ கூடத் திருப்பியெடுக்காமல், அங்கிருக்கும் தீவிரவாதிகளை விசாரித்துத் தண்டிக்க குர்தீஷ் அதிகாரத்துக்குத் தேவையான உதவிகளைக் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்று மனித உரிமை அமைப்புக்கள் விமர்சித்து வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்