மதி நுட்பத்தால் உங்கள் வெற்றி இருக்கும் |மீன ராசிக்காரர் பொதுப்பலன்கள்

பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும்,

மற்றும் ஜென்ம ராசி எதுவென்று தெரியாத பங்குனி மாதத்தில் பிறந்தவர்களுக்கும்,

தி, து, ஸ, ச, த, தே, தோ, சா, சி…. ஆகிய எழுத்துகளைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.

ராசி அதிபதி: குரு. நட்சத்திர அதிபதிகள்: குரு, சனி, புதன். யோகாதிபதிகள்: குரு, சந்திரன், செவ்வாய். பாதகாதிபதி: புதன். மாரகாதிபதிகள்: புதன், சனி.


வெற்றிக்குரிய பாதையைத் தெரிந்து எப்போதும் அதை நோக்கி செல்லுகின்ற, எந்த ஒன்றிலும் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற எண்ணம் உடைய மீன ராசி நண்பர்களே!

உங்கள் ராசிநாதன் குருபகவான் தான் பொன்னுக்கும் புத்திரருக்கும் காரகத்துவம் பெற்றவர். பூர்வ புண்ணியத்திற்கும் குரு பகவானே காரகத்துவம் பெற்றவர். தங்கள் செயல்களினால் மற்றவர்கள் காணும் வெற்றியை உங்கள் மதி நுட்பத்தினால் நீங்கள் அடைந்து விடுவீர்கள். உங்கள் அறிவாற்றலுக்கும், நீங்கள் மதிப்பிற்குரியவராக வாழ்வதற்கும் காரணமானவர் உங்கள் ராசிநாதனான குரு பகவானே.

குரு பகவானின் ஆதிக்கம் கொண்டவர் நீங்கள் என்பதால்தான் மற்றவர்களிடமிருந்து நீங்கள் எல்லாவற்றிலும் வித்தியாசமாக இருப்பீர்கள். உங்கள் சிந்தனையும் செயலும் எண்ணமும் மற்றவர்களைவிட வேறுபட்டிருக்கும். கால புருஷ தத்துவத்தின் அடிப்படையில் பனிரெண்டு ராசிகளில் கடைசி ராசியாக உங்கள் ராசி இருந்தாலும் வளர்ச்சியில் எப்போதும் முதல் நிலையில் நீங்கள் இருப்பீர்கள். மற்றவர்களுக்கு அறிவுரைகள் சொல்லி வழிநடத்துகின்ற பணியினை நீங்கள் உங்களுடைய முதன்மையான பணியாக கொண்டிருப்பீர்கள். எந்த ஒன்றுக்கும் ஏதோ ஒரு காரணம் உண்டென்று நினைத்துக் கொண்டு உங்கள் செயலை அமைத்துக் கொள்வீர்கள். உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதன்படியே ஒவ்வொன்றையும் நீங்கள் நடத்துவீர்கள். உங்களுக்கு நீங்களே நீதிபதி என்பதால், உங்கள் மனம் என்ன நினைக்கிறதோ அதை மட்டுமே வேத வாக்காக எண்ணுவீர்கள்.

பொதுவாகவே கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அடுத்தவருக்கு உபதேசம் புரிவதில் நீங்கள் வல்லவர்கள் மட்டுமல்ல மற்றவரை உங்கள் வழிக்கு கொண்டு வருவதிலும் நீங்கள் தந்திரசாலிகளாக இருப்பீர்கள். வெளித்தோற்றத்திற்கு மிகச்சிறப்பாக வாழ்பவராக உங்களை மற்றவர்கள் எண்ணினாலும் உங்கள் வாழ்க்கை என்ன என்பது என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்.

பனிரெண்டாமிடம் என்பது விரயஸ்தானம், அயன சயனஸ்தானம் என்பதால், பொதுவாக உங்கள் ராசியில் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நிறைய செலவு செய்திடக்கூடியவர்களாக இருப்பீர்கள், உங்கள் செலவுகள் ஒவ்வொன்றும் உங்களுக்குத் தேவையானதாகவும் உங்கள் அடிப்படைத் தேவைகளுக்காகவுமே இருக்கும் என்பதால் உங்கள் மனம் மகிழ்ச்சியுறும். அதேபோல், அயன சயனத்திற்குரிய ராசியினரான நீங்கள் உங்கள் படுக்கையறையை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வீர்கள். படுக்கையறையில் மற்ற ராசியினர் அடையும் சந்தோஷத்தைவிட அதிகபட்சமான சந்தோஷத்தை அடையக்கூடியவராகவும் வழங்கிடக்கூடியவராகவும் நீங்களே இருப்பீர்கள்.

இறைவனின் சக்தியை முழுமையாக அடைந்திட வேண்டும் என்று நீங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்ஙள் மனதின் அடி ஆழத்தில் தெய்வீக, ஆன்மீக சிந்தனைகள் பதிந்திருக்கும். நீங்கள் நகரப்பகுதிகளில் வசித்தாலும் இயற்கை எழில் கொஞ்சும் கிராம வாழ்க்கையின் மீது அதிகமான பிரியம் கொண்டவராக இருப்பீர்கள். உங்களில் பெரும்பாலோருக்கு கண்கள் கவர்ச்சியாக இருக்கும். நீங்கள் உங்கள் சக்திக்கும் மிஞ்சிய செயல்களில் உங்களை ஈடுபடுபடுத்திக் கொள்வீர்கள். உங்கள் சக்திக்கும் மிஞ்சிய விஷயங்களைக் கற்பனை செய்தும் நினைத்துப் பார்த்தும் அதன்படிய வாழ முயற்சிப்பீர்கள். நினைத்ததை சாதித்து விட வேண்டும் என்ற வைராக்கியம் எப போதும் உங்களிடம் மேலோங்கியே இருக்கும்.

உங்கள் ராசியில் பிறந்த பலர் பிற்கால வாழ்க்கையில் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு உச்சத்தையும் எட்டியுள்ளனர். அதற்குக் காரணம் உங்கள் ராசிநாதனான குருபகவானே.

நடைமுறை வாழ்க்கையில் கூட உங்களால் எது முடியுமோ, எது உங்களுக்கு சாதகமாக அமையுமோ அதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவீர்கள். சூழலுக்கேற்ப வாழ வேண்டிய வழிமுறைகளையும் நீங்கள் உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களின் போக்கு பலருக்கும் ஆச்சரியமாகவே இருக்கும். வாழ்க்கையின் மேடு பள்ளங்களையும் வெற்றித் தோல்விகளையும் சந்திப்பவர்கள் நீங்கள் என்றே சொல்லவேண்டும் என்றாலும் ஒவ்வொன்றையும் அனுபவமாகக் கொண்டு உங்கள் எதிர்காலத்திற்குரியவற்றை வடிவமைத்துக் கொள்வீர்கள். சில நேரங்களில் எரிமலைபோல் நீங்கள் வெடித்தாலும் அடுத்த நிமிடமே ஆழ்கடல்போல் அமைதியாகி விடுவீர்கள். சிறிய விஷயத்தையும் பெரிதாக நினைத்து மகிழ்வீர்கள். பெரிய விஷயத்தை மிகவும் சாதாரணமாக நினைத்து விடுவீர்கள்.

உங்களை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. வீம்பு என்று வந்துவிட்டால் எந்த ஒரு நிலைக்கும் போக நீங்கள் தயங்க மாட்டீர்கள். சில நேரங்களில் நீங்கள் சோர்வடைந்து உங்கள் செயலிலும் தோல்வி அடைந்து விடுவீர்கள். அதை உங்கள் முகமே காட்டிக் கொடுத்துவிடும்.

உங்கள் வாழ்க்கையில் எதார்த்தத்தை விட கற்பனைக் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் போலவே வாழ விரும்புவீர்கள், நீங்கள் படித்த கதைகளை வைத்து அதே போல் வாழ்க்கை அமைய வேண்டுமென்று விரும்புவீர்கள். வாழ்க்கையில் மற்றவர்கள் அடையாததை அடைய முடியாததை நீங்கள் அடைய வேண்டும் என்று நினைப்பீர்கள். உங்களில் சிலர் புதையல் கண்டெடுத்து அதிர்ஷ்டம் காண்பவராகவும், திடீர் அதிர்ஷ்டம் உண்டாகக் கூடியவர்களாகவும் இருப்பீர்கள். உங்களைப் பாராட்டி புகழ்வோரையும் உங்கள் விருப்பப்படி நடப்போரையும் நீங்கள் பெரிதும் மதிப்பீர்கள். நீங்கள் உங்கள் சொந்த விஷயங்களில் அக்கறையாக செயல்பட்டால்தான் உங்களால் முன்னேற முடியும். எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதை திட்டமிட்டு நீங்ஙள் செய்தால் கண்டிப்பாக அதில் வெற்றி பெறுவீர்கள். பொதுவாக உங்களுக்கு பொது நலனில் அதிக அக்கறை இருக்கும் மற்றவர்களுக்கு நீங்களாகவே வலியச்சென்று உதவிகள் செய்வீர்கள். நடந்து போனதைப் பற்றி சிந்திப்பதை விட அடுத்து என்ன செய்யலாம் என்ற நிலையில் தான் உங்களுடைய செயல்கள் அமையும். உங்களின் திறமை, தகுதி போன்றவற்றை முழுமையாக நம்பி செயல்பட்டு வெற்றி பெறுவதைவிட எதிரியின் பலம், பலவீனம் பார்த்து காத்திருந்து வெற்றி பெறுவதுதான் உங்களின் சிறப்பாக இருக்கும். எப்போதும் மற்றவர்களை ஈர்த்திடக் கூடிய வகையில் உங்கள் செயல்கள் இருக்கும். சுற்றி இருப்போரின் மனநிலைக்கு தகுந்தவாறு, சூழ்நிலைக்கேற்றவாறு உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். எப்போதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற இலக்குடன் வாழக்கூடியவரான உங்களுக்கு கற்பனை ஆற்றலும், படைப்பாற்றலும், மற்றவர்களை வழிநடத்தும் அறிவும் நிறைந்திருக்கும்.

இவையெல்லாம் மீன ராசியில் பிறந்த உங்களுடைய பொதுப்பலன்களில் சிலவாகும்.

எந்த ராசியில் பிறந்தாலும், லக்கினம், கிரக அமைப்புகள், தசாபுத்தி போன்றவற்றுக்கு ஏற்பவும், கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்பவும், அந்த கிரகங்கள் உங்களுடைய ஜாதகத்தில் அமர்ந்திருந்த நிலைக்கேற்பவும் உங்களுக்குப் பலன்கள் மாறுபடும்.

எழுதுவது – சோதிடவித்தகர் பரணிதரன்