இரண்டாவது காலிறுதி மோதலில் புர்க்கினோ பாசோவுக்கு வெற்றியைக் கொடுத்த 19 வயது இளைஞன்.

ஆபிரிக்க உதைபந்தாட்டக் கோப்பைக்கான இரண்டாவது மோதல் சனியன்று கமரூனின் கரூவா [Garoua] நகரில் நடைபெற்றது. அந்த மோதலில் துனீசியாவைச் சந்தித்த புர்க்கினோ பாசோ குழு விளையாட்டின் முதலாவது பாதியிலேயே 1 – 0 என்ற வித்தியாசத்தில் வென்று துனீசியாவைப் பந்தயத்திலிருந்து வீட்டுக்கனுப்பியது. 

19 வயதான டங்கா கத்தாரா தனது நாட்டின் குழுவுக்காக முதல் தடவையாக எதிரணியின் வலைக்குள் பந்தைப் போட்டு அந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அவர் இரண்டாவது பாதியை விளையாடும்போது அலி மாலூல் என்ற எதிரணிக்காரரை முழங்கையால் தாக்கினார். அதற்காக நடுவர் அவருக்கு மஞ்சள் அட்டையைக் காட்டினார். அதை நிரூபிக்க அதுபற்றிய நேரடிப் படங்களைப் பார்த்த பின்பு சிகப்பு அட்டையைக் காட்டி கத்தாராவை வெளியே அனுப்பினார்.

புர்க்கினோ பாசோ அணியினர் மோதலின் கடைசி ஏழு நிமிடங்களைப் பத்து வீரர்களுடன் மட்டுமே விளையாட வேண்டியதாயிற்று. இரண்டாவது பாதியில் துனீசிய அணியினர் விழித்துக்கொண்டு உற்சாகமாக விளையாடிய போதும் அவர்களால் புர்க்கினோ பாசோவின் வலைக்குள் பந்தை அடிக்க முடியவில்லை.

ஞாயிறன்று நடக்கவிருக்கும் செனகல் – ஈடுவடோரியல் கினியா மோதலில் வெல்பவர்களை புர்க்கினோ பாசோ அணி அரையிறுதிப் போட்டியில் சந்திக்கும்.

சாள்ஸ் ஜெ. போமன்