டிரசகேயும், முஹம்மது சாலேயும் சேர்ந்து மொரொக்கோவை வீட்டுக்கனுப்பினார்கள்.
உதைபந்தாட்டத்தின் ஆபிரிக்கக் கோப்பைக்கான காலிறுதிப் போட்டிகளில் ஞாயிறன்று எகிப்தும், மொரொக்கோவும் மோதின. வழக்கமான நேர எல்லைக்குள் எந்த அணியும் வெற்றியெடுக்காததால் மோதல் நீடித்துப் பார்வையாளர்களுக்குப் பிரத்தியேக விறுவிறுப்பைக் கொடுத்தது. எகிப்தின் வலைக்குள் மொரொக்கோ அணியினர் முதலாவதாகப் பந்தை உதைத்துப் புள்ளியை எடுத்தாலும் நீட்டப்பட்ட நேரத்தில் வெற்றிக்கான பந்தை மொரொக்கோவின் வலைக்குள் தள்ளி 2 – 1 என்ற இலக்கத்தில் அரையிறுதிப் போட்டிக்குத் தாவினார்கள் எகிப்தியக் குழுவினர்.
மோதலின் முதல் பகுதியில் எகிப்தின் வீரர் ஐமான் அஷ்ரப் எதிரணியைச் சேர்ந்த ஹக்கிமை இழுத்து விழுத்துவதை நடுவர் கண்டுவிட்டார். அதற்குத் தண்டனையாக எகிப்தின் வலைக்கு அருகே பந்தை வைத்து அடிக்க மொரொக்கோவுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. சொபானி பூபல் கிடைத்ததை வெற்றிகரமாகப் பயன்படுத்தி 1 – 0 என்று எகிப்திக்கெதிராக கோல் போட்டார்.
எகிப்தின் தங்க மகனென்று அழைக்கப்படும் முஹம்மது சாலே இரண்டாவது பாதியில் தனது விளையாட்டு நுட்பத்தால் எல்லோரையும் கவர்ந்தார். 53 வது நிமிடத்தில் அவர் மொரொக்கோவின் வலைக்குள் பந்தை உதைத்து 1 – 1 ஆக்கியதும் விளையாட்டின் விறுவிறுப்பு மேலும் அதிகரித்தது.
90 நிமிடத்துக்கு எந்த அணியுமே வெற்றியைச் சுவீகரிக்காமலிருக்கவே விளையாட்டைத் தொடரவிட்டார் நடுவர். அதன் பின்னான 10 நிமிடத்தில், மொரொக்கோவின் வலைக்கு அருகே நழுவியிருந்த எகிப்தின் இன்னொரு சர்வதேசத் திறமையான டிரசகேயிடம் பந்தை அனுப்பினார் சாலே. அதை அவர் வலைக்குள் போட எகிப்து 2 – 1 என்ற வெற்றியைப் பெற்றது.
அரையிறுதி மோதலில் எகிப்தை நேரிடவிருக்கிறது கமரூன் அணி.
சாள்ஸ் ஜெ. போமன்