ஆட்சியைக் கைப்பற்றிய புர்க்கினோ பாசோ இராணுவத் தலைவர் நாட்டின் தற்காலிக ஜனாதிபதியானார்.
சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் புர்க்கினோ பாசோவில் ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தது. நாட்டைப் பாதுகாத்து மறுசீரமைப்புச் செய்யும் இயக்கம் [Patriotic Movement for Preservation and Restoration] என்ற பெயருடன் ஒரு இராணுவத் தளபதிகள் குழு நாட்டின் ஜனாதிபதியைக் கைதுசெய்துவிட்டு ஆட்சியைத் தன் கையில் எடுத்துக்கொண்டதாகவும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் காலாவதியானது என்றும் அறிவித்தது.
பதவியகற்றப்பட்ட ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் என்று குறிப்பிடப்படும் போல் – ஹென்ரி சண்டௌகோ டமீபா என்ற இராணுவத் தளபதியே அந்த ஆட்சிக் கவிழ்ப்பின் தலைவராகும். அதையடுத்து ஆபிரிக்க அரசுகளின் கூட்டமைப்பும், மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார ஒன்றியமும் இராணுவத்தின் நடவடிக்கையைக் கண்டித்து புர்க்கினோ பாசோவைத் தமது கூட்டமைப்புக்களிலிருந்து விலக்கிவிட்டன.
கடந்த ஒன்றரை வருடங்களில் மேலும் இரண்டு மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் கூட ஆட்சிக்கவிழ்ப்பு இராணுவத்தால் நடாத்தப்பட்டிருக்கிறது. அப்பிராந்தியத்தில் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் கொடூரமான தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாத அரசுகளே இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டிருப்பதாகச் சில அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். அத்துடன் ஆட்சிக் கவிழ்ப்புக்கள் நடந்த மாலி, கினியா ஆகிய நாடுகளின் இராணுவங்கள் ரஷ்ய அரசின் பின்னணியால் இயக்கப்படும் வாக்னர் தனியார் இராணுவத்தைத் தமது ஆதரவுக்கு வாடகைக்கு எடுத்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
புர்க்கினோ பாசோவின் ஆட்சியைக் கைப்பற்றித் தன்னை ஜனாதிபதியாகப் பிரகடனம் செய்துகொண்ட டமீபா மீண்டும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்திருப்பதாகத் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தி, சமூக மறுசீரமைப்புச் செய்தபின் மீண்டும் நாட்டில் மக்களாட்சி கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
நாட்டில் சட்டம் ஒழுங்குகள் யாவும் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டபடி நிலைநாட்டப்படும், நாட்டு மக்களின் மனித உரிமைகள் யாவும் மதிக்கப்படும் என்று புதிய அரசு தெரிவித்திருக்கிறது.
மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் புர்க்கினோ பாசோவின் ஆட்சியாளர்களாகிய இராணுவக் குழுவினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார்கள். அதன்பின், சுமுகமான, வெளிப்படையான கருத்துப் பரிமாறல்கள் நடந்ததாகவும் தாம் அந்த நாட்டுடனான தொடர்புகளை முழுவதுமாக வெட்டிக்கொள்ளப்போவதில்லை என்றும் அவ்வமைப்பின் பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கிய கானாவின் வெளிவிவகார அமைச்சர் ஷெர்லி அயோர்க்கார் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்