அச்சம் விலக்கு…

இனியும் என்ன இனியும் என்ன
அச்சம் நெஞ்சிலே! – இனியும்,
இழப்ப தற்கு எதுவு மில்லை
நமது வாழ்விலே!

கொடுமைக் கண்டு நடுங்கும் வாழ்வை
நாமும் வாழ்வதா?- இங்கே,
அடிமை என்ற இழிந்த சொல்லை
நாமும் ஏற்பதா?

மனித ராக பிறந்தோ ரெல்லாம்
மண்ணில் ஒன்றடா!- இங்கே,
மனிதர் தம்மில் உயர்வு தாழ்வு
செய்தோன் யாரடா?

விலங்கு பூட்டி அடிமை செய்த
விலங்கு யாரடா?- நீ,
கலங்கி நின்று அழுது வாழ்ந்து
நடப்ப தென்னடா?

நிமிர்ந்து நின்று வலிமை கொண்டு
நடந்து பாரடா!- உன்னை,
உமியாய் எண்ணி இழித்தோ ரெல்லாம்
நடுங்கக் காணடா!

புயலுக் கிங்கே சிறைகள் செய்ய
பிறந்தோன் யாரடா?- நீ,
பயந்தி ருந்து குனிந்தி ருந்து
வசித்தல் ஏனடா?

அடைத்து வைத்த சிறையின் பூட்டை
உடைக்கச் செய்யடா!- அவர்,
படைத்து வைத்த மடமை தன்னை
புரட்டி வையடா!

எழுதுவது : பாரதிசுகுமாரன்