பொருளாதாரக் குற்றங்கள் அனைத்திலுமிருந்து விடுவிக்கப்பட்டார் ஸ்பெயினின் முன்னாள் அரசர் ஹுவான் கார்லோஸ்.

தன் மீது போடப்பட்ட பொருளாதார ஏமாற்றுக் குற்றங்களால் கடந்த பதினெட்டு மாதங்களாக அபுதாபியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார் ஸ்பெய்னின் முன்னாள் அரசன் ஹுவான் கார்லோஸ். 1975 முதல் 2014 ம் ஆண்டு வரை ஸ்பெய்ன் அரசனாக இருந்த கார்லோஸ் தனது மனைவியையும் விட்டுவிட்டு இரகசியமாக 2020 இல் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

கார்லோஸ் பதவியை விட்டு 2014 இல் இறங்கக் காரணமாக இருந்ததும் அவர் மீது சாட்டப்பட்ட பொருளாதார ஏமாற்றுக் குற்றங்கள் தான். அத்துடன் ஸ்பெயின் பெரும் பொருளாதார நெருக்கடியிலிருந்த அந்தச் சமயத்தில் அவர் யானை வேட்டைக்காக பொட்ஸ்வானாவுக்குப் போயிருந்தது வெளிவந்ததும் ஆகும். அவரையடுத்து அவரது மகன் நாலாவது பிலிப் அரச பட்டம் ஏற்றார். த்ன் மீது ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் நிழல் மகன் மீது விழலாகாது என்பதாலேயே அவர் நாட்டை விட்டோடியதாகக் குறிப்பிடப்பட்டது.

சவூதி அரேபியாவில் ஸ்பெயின் நிறுவனமொன்று நிர்மாணித்த ரயில் சேவைக்காக லஞ்சம் வாங்கியது, மெக்ஸிகோ நாட்டுத் தொழிலதிபர் ஒருவரின் பணத்தில் தனது பேத்திக்குக் குதிரை வாங்கியது போன்ற குற்றங்களுக்காக கார்லோஸ் மீது விசாரணை நடத்தப்பட்டது. ஸ்பெயின் வழக்கறிஞர்கள் காரோஸ் சமர்ப்பித்திருந்த பொருளாதார அறிக்கைகள் பலவற்றில் ஒழுங்கின்மையைக் கண்டாலும் அவை அவர் அரசராக இருந்த காலத்தில் செய்யப்பட்டவை என்பதால் அவருடைய அரச பதவி அவர்மீது வழக்குத் தொடர அனுமதிக்கவில்லை.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் கார்லோஸ் தான் கட்டத் தவறிய வரி சுமார் 5 மில்லியன் எவ்ரோவை ஸ்பெயினுக்குக் கொடுத்திருந்தார். அபுதாபியில் மறைந்து வாழ்ந்து வந்த அவர் பொது வெளிச்சத்தில் தலை காட்டுவதைத் தவிர்த்திருந்தார்.

85 வயதான ஹுவான் கார்லோஸ் மீதான வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டிருப்பதால் அவர் ஸ்பெயினுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்